Latest News

May 07, 2014

முல்லைப் பெரியாறு அணை: 142 அடி நீரை தேக்கலாம்: கேரளாவின் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை: 142 அடி நீரை தேக்கலாம்: கேரளாவின் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்


முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்மட்டம் அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது. பின்னர் அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளா அணையின் நீர் தேக்கி வைக்கும் அளவை 136 அடியாகக் குறைத்தது. ஆனால் தமிழகமோ 142 அடியாக நீர் தேக்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து கேரளா நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி , அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்த பிறகு, முழுக் கொள்ளளவான 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. ஆனால் இதை நிராகரித்த கேரளா, 2006, மார்ச் 18-ந் தேதியன்று கேரளா சட்டசபையில் அணை பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் இந்த சட்டத்தின்படி நீர் தேக்கும் அளவை உயர்த்த முடியாது என்று கூறியது கேரளா. 

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 2010 பிப்ரவரி 18 ந் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, 2012 ஏப்ரல் 25ந் தேதி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆனந்த் குழு அறிக்கை அளித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி இந்த வழக்கில் தலைமை நீதிபதி லோதா, நீதிபதிகள் சந்திரமெளலி, கே.ஆர். பிரசாத், டட்டூ, இக்பால், மதன் பி லோகூர் ஆகியோர் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர் தேக்க அளவை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று கூறியுள்ளது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கேரளாவின் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் புதிய அணை கட்ட கட்டவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல் அணையின் பாதுகாப்புக்கான குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


« PREV
NEXT »