Latest News

May 19, 2014

பொங்கி எழும் புதிய தலைமுறை தமிழீழத்தை மீட்டே தீரும்!
by admin - 0

இன்னொரு பிரளயத்திற்கான அத்தனை முகாந்திரமும் தமிழீழ மண்ணில் தீவிரமாகி, நிலைபெற்றுள்ளது. அறுபதுகளின் சிங்கள இனவாத முகம் ஒரு பிரபாகரனைப் பிரசவித்தது போல், இன்றைய சிங்கள இனவாதக் கொடூரம் நிச்சயம் எண்ணற்ற பிரபாகரன்களைப் பிரசவிக்கப் போகின்றது.
அடக்குமுறை மூலம் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விடலாம் என்ற சிங்களக் கணக்கை, இன்றைய தமிழீழம் தோற்கடிக்கும் முனைப்பைப் பெற்று வருகின்றது.
முள்ளிவாய்க்கால் வலிகளை நீவி விடுவதற்கு எந்த நாதியுமற்ற ஈழத் தமிழர்கள், தாங்களாகவே அழுது தீர்த்துக் கொள்ளவும், அஞ்சலி செலுத்தவும் சிங்களத் திமிர் இராணுவத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், ஆங்கங்கே இந்தத் தடைகளை மக்களும், அவர்களது தலைவர்களும் தகர்த்தெறிந்து சிங்களத்தை அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
முன்னாள் சிறிலங்காவுக்கான நாடாளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள் முள்ளிவாய்க்கால் மனிதர்களுக்காக ஏற்றிய சுட்டி விளக்கு சிங்களக் காவல் படையினர்களால் தட்டி வீழ்த்தப்பட்டு, காலால் அணைக்கப்பட்ட கொடுமைகள் ஒளிப்பதிவுகளாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் பிதிர்க்கடனை நிறைவேற்ற கீரிமலைக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதி கோரி வீதியில் அமர்ந்து போராட்டம் நடாத்தினார். இன்னமும் பல இடங்களில் சிங்களத் தடைகளையும் மீறி, மே 18 மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உயிரைப் பெரிதாக எண்ணாமல், உடலையே வெடிகுண்டாக்கி, சிங்கள இலக்குக்களைச் சிதறடித்த வீர மறவர்களது உறவுகளை எத்தனை காலத்திற்கு ஆயுத முனைகளில் அடக்கி வைத்திருக்க முடியும்?
எரிமலைகளைச் சிறைபிடித்து விட்டதாக சிங்களம் எத்தனை காலங்களுக்கு வெற்றிக் கொண்டாட்டங்களை நிகழ்த்த முடியும்? பதுங்கியது போதும் என்று புலிகள் முடிவெடுத்துவிட்டால், சிங்களத்தின் படைகள் எத்தனை நாட்கள் தமிழீழ மண்ணில் நிலைகொண்டிருக்க முடியும்?
இலங்கைத் தீவிற்குள் எரிந்த தமிழீழ விடுதலை நெருப்பு, இன்று கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பற்றிப் படர்ந்து வருகின்றது. தமிழகத்தின் கொந்தளிப்பு பல பக்கங்களிலும் பொங்கி எழுகின்றது என்பதை முள்ளிவாய்க்கால் முற்றம் சாட்சி பகர்கின்றது.
மெரினா கடற்கரையில் ஏற்றப்படும் தீபங்கள் கரை கடக்கத் தயாராகின்றன. தமிழகத்தின் அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளும் தமிழீழ மக்களுக்கான போர்க் கருவிகளாக்கப்பட்டுவிட்டன. புரட்சித் தலைவி அம்மா அவர்களது தமிழீழம் சார்ந்த தீர்மானங்களுடன் டெல்லியைத் தாக்கத் தயாராகிவிட்டன.
தமிழகமா? சிங்களமா? என்ற தமிழ் மக்களது கேள்விக்கு பாரதப் பிரதமராகப் பதவி ஏற்கப் போகும் மோடி அவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் உருவாகிவிட்டது. எதற்காக, தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டது? என்ற சூத்திரத்தைப் புரிந்து கொண்ட மோடி, சிங்களத்தின் இனவாதத்துடன் கைகோர்த்து, தமிழகத்தை முற்றாக இழந்துவிட முயலமாட்டார்.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் மீளெழுச்சி கொண்டுள்ளார்கள். நடைபெற்ற அத்தனை மே 18 இன அழிப்பு நிகழ்விலும் தமிழ் மக்கள் நிறைந்தே கலந்து கொண்டுள்ளார்கள். அதுவும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இந்த வருடத்தின் அதி உச்ச ஆச்சரியம். உலகை வளைத்தெடுக்கும் அசாத்திய துணிச்சலும், ஆற்றலும் கொண்ட எங்கள் புதிய தலைமுறையினர். தமிழீழத்தை மீட்டே தீருவார்கள் என்ற நம்பிக்கை உருவாகிவிட்டது.
ஆக மொத்தத்தில், தமிழீழம், தமிழகம், புலம்பெயர் தமிழர்கள் என அத்தனை தரப்பும் தமிழீழத்தின் பிறப்பிற்காகப் புதிய போர்க் களத்தில் ஒன்றாக எழுந்து நிற்கின்றார்கள். இந்த எழுச்சிப் பிரவாகம் யாராலும் ஒதுக்கித் தள்ளப்பட முடியாதது.
ஒன்றரைக்கோடி சிங்கள மக்களது இனவாதக் கொடூர விருப்பங்களுக்காக பத்துக்கோடி தமிழ் மக்களை எந்த உலக சக்திகளும் ஒதுக்கித் தள்ள முடியாது. தமிழ் மக்கள் தங்கள் பலத்தைப் புரிந்துகொண்டு, போர்க்களத்தை ஒருமுகப்படுத்தும் காலத்தில் சிங்களம் சிதைந்தே போய்விடும்.
நம்பிக்கைகள் நிச்சயம் மாற்றங்களை உருவாக்கும். மகாத்மா காந்தி நம்பினார், இந்தியா விடுதலை பெற்றது. மார்ட்டின் லூதர் கிங் நம்பினார், ஒரு கறுப்பினத் தலைவரான ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியானார். நெல்சன் மாண்டேலா நம்பினார், தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சியைத் தகர்த்தெறிந்தார்.
பிரபாகரன் நம்பினார், இலங்கைத் தீவிற்குள் எரிந்த விடுதலைப் போர், கடல் கடந்து தேசங்கள் எங்கும் விரிந்து செல்கின்றது. ஐ.நா.வின் மூடிய கதவுகளும் ஈழத் தமிழர்களுக்காகத் திறந்து கொண்டுள்ளது. தமிழீழம் விடுதலை பெறும்வரை தமிழர்கள் ஓயமாட்டார்கள்.
- கரிகாலன்
« PREV
NEXT »