சுவிட்சர்லாந்தின் குடியகல்வு அலுவலகம் இரு இலங்கையருக்கு தஞ்சக் கோரிக்கை நிராகரித்து, நாட்டுக்குத் திருப்பியனுப்பியமை தவறான தீர்மானம் என கடுமையான கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்ட இருவர், இலங்கை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையிலேயே குடியகல்வு அலுவலகம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,
2011 இல் எடுக்கப்பட்ட இந்த “தவறான தீர்மானம்” தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இருவரதும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, அது குறித்து வெளியக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அப்போது இருவரும் நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்.
மனித உரிமைகளுக்கான சுவிஸ் நிபுணர்கள் அமைப்பு, ஐ.நா. அகதிகள் நிறுவனம் ஆகியனவே இது தொடர்பிலான விசாரணைகளை நடத்தின.
தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் போதியளவுக்கு பரிசீலனைக்குள்ளாக்கப்படவில்லை என இவை தெரித்திருந்தன. இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தமையும் தவறு நிகழ்ந்தமைக்குக் காரணம் எனவும் அவ்வமைப்புக்களின் விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது.
நாடுகடத்தப்பட்ட இரு இலங்கையர்களும் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து 2013 ற்குப் பின்னர் இலங்கையர்களை நாடு கடத்தும் செயற்பாடுகளை சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியிருக்கின்றது. 2001 முதல் 2013 வரையிலான காலப்பகுதியில் 250 இலங்கையர்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.
இதேவேளை, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோர் மீது தற்காலிக தடை விலக்கப்பட வேண்டும் மற்றும் நிலுவையில் வழக்குகள் மறு மதிப்பீடு செய்யப்படும் என குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, நாடுகடத்தப்படுவோர் தொடர்பாக மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
Social Buttons