Latest News

May 06, 2014

புலிகள் மீண்டும் உருவாகுவதாக தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்கிறார்கள்!
by admin - 0


விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாக கருதி தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து கடல் வழியாக படகு மூலம் தமிழ்நாட்டிற்குச் சென்ற தமிழ் அகதிகளில் சிலர், அங்கிருந்து வெளியாகும் ஒரு தமிழ் தினசரி செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர்கள் கண்ணீர் மல்க மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இவர்களில் அகதியாக வந்த சுதாகரன் கூறியதாவது:–
இலங்கை முல்லைத்தீவில் முள்ளியவளையில் குடும்பத்தோடு வசித்து வந்தேன்.
மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகி வருவதாக கடந்த சில மாதங்களாக இலங்கை அரசு கூறி வருகிறது.
அங்குள்ள தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறி இலங்கை இராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள்.
இராணுவ முகாம்களில் அடைத்து வைத்து அவர்களை சித்திரவதை செய்கின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 1996–ம் ஆண்டில் இருந்து 2002–ம் ஆண்டு வரை நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
ஆனால் எனக்கு திருமணமான பிறகு இயக்கத்திலிருந்து வெளியேறி விட்டேன்.
சுட்டுக் கொல்கிறார்கள்
அங்கு போர் முடிவுக்கு வந்த பின் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை. இதை இலங்கை அரசும் பலமுறை உறுதிபடுத்தி உள்ளது.
ஆனால் புதிதாக இப்போது இயக்கம் உருவாகி வருவதாக கூறி பொய்யான காரணங்களை கூறி தமிழ் இளைஞர்களை நிம்மதியாக வாழ விடாமல் பிடித்துக் கொன்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 தமிழ் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டனர்.
தமிழ் இளைஞர்கள் அங்கு வாழவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என் மனைவி, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று உயிருக்கு பயந்து படகோட்டிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்து இங்கு வந்து விட்டேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
தனிநபராக அகதியாக வந்துள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த தவேந்திரன் (34)  கூறியதாவது:–
இலங்கை முல்லைத்தீவில் குடும்பத்தோடு தங்கி இருந்து வந்தேன். வாகன சாரதியாக  வேலை பார்த்தேன்.
இலங்கை இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று ஒரு வருடத்திற்கு மேலாக முகாமில் அடைத்து சித்திரவதை செய்து அதன் பிறகு விடுவித்தனர்.
இப்போதும் பலமுறை விசாரணைக்கு வருமாறு தொந்தரவு கொடுப்பதுடன் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக இருந்து வருகின்றன.
அரசுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதுவும் இலங்கை அரசுக்கு தமிழ் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடாமல் கெடுபிடி செய்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதலமைச்சாரக இருந்தும் அவரை செயல்பட விடாமல் இலங்கை அரசு ஒரு பொம்மையாகவே வைத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருடன் சீனா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் பலரை பார்த்துள்ளோம்.  அவர்கள் அந்த நாட்டு இராணுவத்தினரா? என்பது பற்றி தெரியாது.
அவர்கள் இராணுவ சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து வந்தனர்.
இலங்கை இராணுவத்தின் கெடுபிடியால் நாங்கள் இப்போது அங்கிருந்து அகதிகளாக வந்துள்ளோம்.
எங்களைப் போல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகதிகளாக வந்த 5 இலங்கை தமிழர்கள் மீது வழக்கு பதிவு! புழல் சிறையில் அடைப்பு
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 5 தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் தொடங்கியுள்ள இராணுவ கெடுபிடிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கையை விட்டு முறையான அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் தமிழர்கள இலங்கை பொலிஸார் கைது செய்து வருகின்றனர். அதனால் சட்ட விரோதமான முறைகளில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதில் பெரும் பகுதி தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளுக்கு செல்வதையே விரும்புகின்றனர். அவ்வாறு செல்ல முயல்பவர்களில் பலர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கின்றனர். இன்னும் சிலர், இயற்கை சீற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில்இ நேற்று காலை இலங்கை முல்லை தீவு பகுதியில் இருந்து 3 ஆண்கள், 2 பெண்கள், 5 குழந்ந்தைகள் உட்பட 10 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு அகதிகளாக வந்தனர். தமிழக போலீஸாரிடம் சரணடைந்த இவர்களிடம், நேற்று இரவு வரை மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில்இ அகதிகளாக வந்தவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் இம்மாதம் 19 ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அகதிகள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை அரசு தமிழ் அமைப்புகள் மீது விதித்துள்ள தடையினை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ள நிலையில்ெ, இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வந்தவர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண். இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »