வவுனியா பஸ் நிலையப் பகுதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடந்த புதன்கிழமை (16) சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தேவிகன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வவுனியா பஸ் நிலைய மேல்மாடியில் உள்ள டாட்டா ஸ்போட்ஸ் என்ற விளையாட்டு உபகரண விற்பனை நிலையம் கடந்த புதன் கிழமை முதல் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கடை முன்பகுதியில் பொலிஸதரும் புலனாய்வுப் பிரிவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கு வேலை செய்த வவுனியா பண்டாரிகுளத்தைச் சேர்ந்த தில்லையன் தீபாகரன் (வயது 22) விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கடை உரிமையாளர் தேவிகன் வசித்து வந்த வீடு கட்டுவதற்கு உதவியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணை இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.
Social Buttons