Latest News

April 11, 2014

கோபி, தேவியன் அப்பன் ஆகியோர் இராணுவ உளவாளிகளே!
by admin - 0

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927) என்பவருக்கு கீழ் பணியாற்றி வந்துள்ளனர்.
கமலராஜா மற்றும் ஏனைய மூவரும் நண்பர்கள். கமலராஜாவே தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இராணுவத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இவர்களின் கொலை மற்றும் சூழ்ச்சி நாடகம் பற்றி உண்மை வெளியாகிவிடும் என்பதால் கமலராஜா என்ற இராணுவ புலனாய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான கமலராஜா பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக முதலில் இராணுவம் கூறியிருந்ததுடன், பயிற்சியின் போது இறந்ததாக பின்னர் கூறியது.
அந்த சிங்கள இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
விடுதலைப் புலிகள் என்ற நாடகத்தை நடத்த இராணுவம் பெரும் செலவுகளை மேற்கொண்டது.
புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரத்தோடை விடத்தல் தீவு காட்டுப் பகுதிகளை இராணுவம் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தது.
2 ஆயிரத்து 500 இராணுவத்தினர், 18 வாகனங்கள் இந்த சுற்றிவளைப்புக்கு பயன்படுத்தப்பட்டன. புலிகளின் புதிய தலைவர் காட்டில் மறைந்திருப்பதாகவும், அவரைத் தேடி இந்த தேடுதல் நடத்தப்படுவதாகவும் பிரசாரம் செய்யப்பட்டது.
பதவியா வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் இராணுவம் சடலம் ஒன்றை கொண்டு வந்து ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட சடலம் யாருடையது என்பது பற்றி தமக்கு தெரியாது என இராணுவத்தினர் பதவிய பொலிஸாரிடம் கூறியுள்ளனர். சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருந்தன.
இதன் பின்னர் இன்று காலை 6 .10 மணியளவில் இராணுவத்தினர் சடலமாக ஒப்படைக்கப்பட்ட இராணுவ வீரரின் விபரங்களை பதவியா பொலிஸாருக்கும் வழங்கினர்.
இராணுவ வீரர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், எஸ்.கே. ராஜா என்ற தமிழர் எனவும், அவரது இலக்கம் 776927 எனவும், அவர் திடீர் விபத்தில் இறந்ததாகவும் இராணுவம் பொலிஸாரிடம் வழங்கிய விபரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த தகவலுக்கு மாறுபட்ட தகவலை இராணுவத்தினர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் விடுதலைப் புலிகளுடன இடம்பெற்ற மோதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் வீரர் எஸ்.கே. ராஜா என்பவர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்ததாகவும், அவரது சடலம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2.40 மணிக்கு எஸ்.கே. ராஜா மோதலில் கொல்லப்பட்டதாக புளியங்குளம் பொலிஸாரிடம் கூறப்பட்டாலும் 1.20க்கு சடலம் பதவியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுடனான மோதலில் புலனாய்வுப் பிரிவின் வீரர் கொல்லப்பட்டதாக புளியங்குளம் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், ராஜா பயிற்சியின் போதே இறந்ததாக இராணுவப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எஸ்.கே. ராஜா என்ற செல்வராஜா கமலராஜா உத்தியோகபூர்வமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் எனவும், கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் உளவாளியாக செயற்பட்ட அவரது நண்பர்கள் என இராணுவத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
« PREV
NEXT »