வடக்கே உள்ள மீனவர்கள் இனிமேல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு கடற்படையினரிடம் அல்லது இராணுவத்தினரிடம் பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது. போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் படிப்படியாகவே, மிக மெதுவாகவே மீன்பிடிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இப்போது ஜெனிவாவில் இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள்சபை விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் மீன்பிடிக்கான பாஸ் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாகப் படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று மீனவர்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
இதற்குக் கட்டியங்கூறும் வகையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் கரையோரப் பகுதிகளில் படையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேவேளையில் கரையோரப் பகுதிகளில் காவலரண்களை மீண்டும் நிறுவும் பணிகளில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். பண்ணையில் இவ்வாறு உயரமான கண்காணிப்புக் கோபுரங்களைக் கடந்த சில நாள்களாகப் படையினர் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் அரியாலை மற்றும் மாதகல் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களிடம், மீண்டும் பாஸ் நடைமுறையைக் கொண்டு வரப்போகிறார்கள் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.
மாதகல் பகுதி மீனவர்களை நேற்றுப் படையினர் சந்தித்துக் கலந்துரையாடினர். அப்போது, மீனவர்களின் நலனுக்காவே தாம் பாஸ் நடைமுறையை மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்று படையினரி கூறினர் என்று மீனவர்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர். நீங்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள். உங்களின் பாதுகாப்புக்காத்தான் இந்தப் பாஸ் நடைமுறை. இங்கிருந்து இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்குமாகக் கடலால் போக்குவரத்துச் செய்கிறார்கள். தங்கம் கஞ்சா என்பவற்றையும் கடத்துகிறார்கள்.
இவற்றையெல்லாம் தடுப்பதற்காகத்தான் மீண்டும் பாஸ் முறையைக் கொண்டு வருகின்றோம் என அந்தச் சந்திப்பில் படை அதிகாரி தம்மிடம் தெரிவித்தார் என்றும் மீனவர்கள் கூறினர். கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவப் போகிறார்கள் என்று மேலிடத்தில் இருந்து தமக்குத் தகவல் வந்ததால் தாம் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறார்கள் என்று அரியாலையில் உள்ள படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே வடமராட்சிகிழக்குப் பகுதியில் உள்ள காவலரண்களில் கடற்படையினருடன் சேர்ந்து இராணுவத்தினரும் கடந்த ஓரிரு நாள்களாகப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். -
Social Buttons