விசுவமடு 12 ஆம் கட்டைப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டுவரும் சிவில் பாதுகாப்பு குழு வளாகத்தினுள் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (13.04.14) மாலை மீட்கப்பட்ட அவரது சடலத்தின் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் காணப்படுவதால் படுகொலை செய்யப்பட்டே வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் பதுளையைச் சேர்ந்தவரான 32 வயதுடைய த.ராஜசுலோசனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வத்தளைப் பகுதியிலுள்ள தையல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்திருந்தவரென கூறப்படுகின்றது. குறித்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரொருவருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த அவர் வவுனியாவில் தங்கியிருந்த அந்நபரை சந்திக்க வந்திருந்ததாக தெரியவருகிறது.
நேற்று இரவு அப்பகுதியில் நாய்கள் குரைத்ததாகவும் சீருடை படைதரப்பினரது பிரசன்னம் காணப்பட்டதாவும் சுற்றிவளைப்பு ஏதும் நிகழ்கின்றதோ என்ற அச்சத்தில் தாம் வீடுகளுக்கு வெளியில் வந்து பார்க்கவில்லையென அயல் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அந்த இடத்துக்குச் சென்ற பொது மக்கள் அப்பகுதியில் இரத்தக்கறைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த வளவுக்குள் தேடிய போது அங்கிருந்த கிணற்றில் ஒரு சடலம் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் அப்பகுதியில் வைத்துப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றுக்குக் போடப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
இவரை குறித்த பண்ணைக்கு அழைத்து வந்திருந்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் அப்பகுதி படைமுகாம் பொறுப்பதிகாரியின் நெருங்கிய சகவெனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Social Buttons