Latest News

April 23, 2014

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவம்
by admin - 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலைஞர்மடம், பனையடி எனப்படும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் முடிக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து படைத்தளம் அமைத்துள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் முறையிடப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதிக்கு அவர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார்.
சம்பவத்தை உறுதிப்படுத்திய பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

வடக்கு தெற்கு மேற்கு பக்கங்கள் முடிக்குரிய தமிழர்களின் காணிகளையும், கிழக்கு பக்கமாக கடலையையும் எல்லைகளாக கொண்டுள்ள எல்லோராலும் களுவாவாடி என்று அறியப்பட்ட தென்னந்தோப்பு காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
1984ம் வருடம் முதல் 2009ம் வருடம் இறுதி யுத்தத்தால் அங்கிருந்து துரத்தப்படும் வரை அக்காணியில் வசித்து வந்த சோமசுந்தரம் அற்புதமலர் என்று அழைக்கப்படும் வயோதிப தாயின் ஆட்சி உரித்துடைய காணியையே இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இறுதி யுத்தத்துக்குப் பின்னர் வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து மீளக்குடியேற கொண்டு செல்லப்பட்ட அவர், தனது காணியில் இராணுவ படைத்தளம் அமைத்திருப்பது கண்டு பெருத்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளார்.
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால், விதவைப் பெண்ணான திருமதி சோமசுந்தரம் அற்புதமலர் வேறு தெரிவுகள் இன்றி குடியிருப்பதற்கு பொருத்தமற்ற வெட்டவெளி காணியில் அநாதவராக விடப்பட்டுள்ளார். அதாவது தனது காணிக்கு வடக்கு எல்லையாக உள்ள தனியார் ஒருவரின் காணியில் வசித்து வருகின்றார்.
இக்காணியில் இருந்து கொண்டு பக்கத்திலுள்ள தனது பூர்வீக காணியில் உலாவ முடியாமல் அக்காணியை பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பதென்பது மரணத்தை விடவும் கொடுமையானது.
தற்போது அக்காணியிலுள்ள தென்னைகள் காய்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த தேங்காய்களைக் கூட இராணுவத்தினர் தமது உணவுத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, பக்கத்து காணியில் இருந்து கொண்டு அதை பார்த்துக் கொண்டு இருப்பது என்பது மிகப்பெரிய மனவேதனையாகும்.
கஸ்டப்பட்டு பராமரித்து உருவாக்கிய தனக்கு உரித்துடைய தென்னை மரங்களில் தேங்காய்களை தனது சுய தேவைக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதும், 45-50 ரூபாய்களுக்கு கடைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்து சமையலில் ஈடுபடுவது என்பதும் ஜீரணிக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
குறித்த காணியில் 60க்கும் மேல்பட்ட தென்னைகளும், மாமரம், பலாமரம் போன்ற சுவை தரும் கனி மரங்களும், வேம்பு போன்ற பயன்தரு மரங்களும், விசாலமான அறைகளைக் கொண்ட கல் வீடும் உண்டு.
பூர்வீக நிலத்துக்குள் மூன்று கட்டுக்கிணறுகள் இருந்தும், இன்று அந்த வயோதிபத் தாயார் குடியிருக்கும் தற்போதைய நிலத்தில் குடிநீருக்கு அலைவது மிகப்பெரிய அவலம். உப்புச்சுவை நீரை அருந்திக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.
உறுதிப்பத்திரங்கள் இருந்தும், காணி பிணக்குகள் மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பான அரச திணைக்களங்கள் பலவற்றிலும் முறையிட்டும் தனது காணியை மீட்டுத் தருவது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் அழுது துடிக்கின்றார்.
பேச்சு வழக்கில் களுவாவாடி காணியை புதையல்புட்டி என்றும் கரையோர கிராம வாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். அப்பகுதி மிகவும் உயர்ந்த மேட்டு நிலப்பகுதியாக இருப்பதால் நிரந்தரமாகப் படை முகாம் அமைத்து கடல் கண்காணிப்பில் ஈடுபடும் நோக்கத்திலோ அல்லது புதையல் என்றதும் விலைமதிப்பற்ற பெறுமதியான பொருள்கள் ஏதாவது அங்கு இருக்கலாம் என்ற மாயையிலோ இராணுவத்தினர் குறித்த காணியை ஆக்கிரமித்திருக்கலாம் என்றும் ஊகிக்கின்றேன். எனவே தான் காணியை விட்டு வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
சோமசுந்தரம் அற்புதமலர் போன்று, தமக்கு உரித்துடைய காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாமலும், வளங்களை நுகர முடியாமலும் காணிகளை பார்த்துக்கொண்டு மட்டும் அவஸ்தைகளோடும் ரணங்களோடும் வன்னியில் எமது மக்கள் ஆயிரக்கணக்கானோர் இருப்பதை நாம் கண்ணுற்றுள்ளோம்.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிகளை மீட்டு உரித்துடையவர்களிடம் ஒப்படைக்க, முல்லைத்தீவு மாவட்ட காணி உரிமை மீட்புக்குழுவினூடாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது நடவடிக்கைகளுக்கு மாவட்ட அரச அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களும் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்கின்றேன் எனவும் அவர் கூறுகின்றார்.





« PREV
NEXT »