Latest News

April 26, 2014

என்னமோ ஏதோ - விமர்சனம்
by admin - 0

எஸ் ஷங்கர் 

நடிகர்கள்: கவுதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டீல், பிரபு 

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் 

இசை: டி இமான்

தயாரிப்பு: ரவிபிரசாத் 

இயக்கம்: ரவி தியாகராஜன் 

சாலையில் நின்று கொண்டிருக்கும் கவுதமை திடீரென கடத்திப் போகிறார் பிரபு. அப்படிக் கடத்திக் கொண்டு போகும்போது, 'சரி உன் கதையைச் சொல்லு' என கவுதமின் பின்னணியைக் கேட்கிறார். கவுதம் ஒரு பணக்கார வீட்டுப் பையன். சிம்ரன் என்ற பெண்ணைக் காதலிக்கிறான். அவளோ வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அந்த ஒருவன் யார் என்றால், ராகுல் ப்ரீத் சிங்கின் முறைப் பையன்.


இந்தத் திருமணத்துக்கு போகும் கவுதம் காதல் தோல்வியை மறக்கக் குடிக்க, அங்கே, மணமகனால் ஏமாற்றத்துக்குள்ளான ராகுல் ப்ரீத் சிங்கும் தண்ணியடித்து தன் ஏமாற்றத்தை மறக்க முயற்சிக்கிறார். 

இரண்டு தண்ணிப் பார்ட்டிகள் அங்கே நண்பர்களாகிறார்கள். கவுதம் சென்னை வந்த பிறகும் ராகுல் ப்ரீத் சிங்குடன் நட்பு தொடர்கிறது. அதை காதல் என நம்பி, அவரிடம் சொல்லப் போகிறார் கவுதம். 

ஆனால் அந்த நேரத்தில்தான் தன் காதலனை அறிமுகப்படுத்துகிறார் ராகுல் ப்ரீத் சிங். பின்னர் நிகிஷா பட்டீலின் அறிமுகம் கிடைக்க, கவுதம் மனது அவர் மீது காதலாகிறது. ஆனால் காதலுடன் போன ராகுல் ப்ரீத் சிங், தன் மனம் உண்மையில் நாடுவது கவுதமைத்தான் எனப் புரிந்து, அவரைத் தேடி வருகிறார். 

அங்கே கவுதம் - நிகிஷா காதலில் விழுந்திருப்பதை அறிந்து தன் காதலை சொல்லாமல் போகிறார். ஆனால் கவுதம் - நிகிஷா காதலும் ஒரு காரணத்தால் முறிகிறது. அட போங்கப்பா... யார் யார் கூட சேர்ந்தாங்க, பிரபு ஏன் கடத்தினார் என கேள்விகள் எழுந்தால், படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்! தெலுங்கில் ஹிட்டடித்த படத்தின் ரீமேக் இந்தப் படம். தலைப்பைப் போலவே என்னமோ ஏதோ என்றுதான் இருக்கிறது. பல காட்சிகள், நடிப்பு எல்லாமே செயற்கையாக இருப்பதைப் போன்ற உணர்வு. 

திருமணத்தில் ஹீரோவும் ஹீரோயினும் குடித்துவிட்டு அடிப்பதாக வரும் லூட்டிகள் எல்லாம் சுத்த பேத்தல். ஹீரோ கவுதம் கார்த்திக் பார்க்க இன்னும் ஸ்கூல் பையன் மாதிரிதான் இருக்கிறார். முகத்தில் உணர்ச்சிகள் வர மறுப்பது தெரிகிறது. இவரை ஹீரோவாக ஏற்க ஏதோ ஒன்று குறைகிறது. அதிலும் இந்தப் படத்தில் அங்கங்கே அவர் ஓரினச்சேர்க்கையாளர் போல சித்தரிக்கப்படுவது, அவரை ரொம்பவே டேமேஜ் செய்கிறது. ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டீல் என இரண்டு நாயகிகள். ராகுப் ப்ரீத் அசப்பில் ப்ரியாமணியை நினைவூட்டுகிறார். 

நடிப்பு? ஜஸ்ட் பாஸ்! மற்றொரு நாயகி நிகிஷா பட்டீலுக்கும் நடிப்பில் இதே ரேங்க்தான்! பிரபு, அழகம்பெருமாள் ஆகியோர் நடிப்பில் குறை வைக்கவில்லை. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, படத்துக்கு பிரமாண்ட கேன்வாஸ் மாதிரி அமைந்திருக்கிறது. வெளிநாட்டுக் காட்சிகள் அருமை. டி இமானின் மெட்டுக்கள் நன்றாக இருந்தாலும், பாடல் வரிகள் காமா சோமாவென கேவலமாக எழுதப்பட்டுள்ளன. படத்தில் எல்லாமே இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே பார்த்த, அல்லது அடுத்து இந்த காட்சி வரும் பாரேன் என்று எளிதாகக் கணிக்கும்படியான காட்சிகள் என்பதால் பெரிய சுவாரஸ்யமின்றி நேரத்தைக் கொல்ல வேண்டியுள்ளது!


« PREV
NEXT »