பிரித்தானியப் பெண்ணொருவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டமை தொடர்பாக கவனம் செலுத்துவதாக பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ஊடகமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நவோமி மைக்கேல் கோல்மன் (37 வயது) என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரித்தானியப் பெண்ணின் வழக்கினை கையாள்வதாக பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகையில்,
குறித்த பிரித்தானியப் பெண் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்துள்ள புத்தரின் படத்தினைப் பச்சை குத்தியது ஏனைய மதத்தினை புண் படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் அவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போது நாடுகடத்தப்படும் வரை அவர் குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் நாடுகடத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடமும் புத்தரின் படத்தினை பச்சை குத்தியிருந்த வெளிநாட்டுப் பிரஜையொருவர் நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons