Latest News

April 06, 2014

புலிகள் தொடர்பான (424 பேரின்) பழைய பட்டியலே வெளியானது; 3000பேரின் விபரங்களுடன் புதிய பட்டியல் தயாராகிறது..!!
by admin - 0


இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது - சட்டப்பிரிவின் கீழ் தடைசெய்துள்ளது. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. இவர்கள் இலங்கைக்கு நுழைவதற்கு தடை என்பதைவிட அதற்கும் மேலாக அவர்களுக்கு பல்வேறு சில்கல்களும் ஏற்படும் அபாயமுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவு, ‘வெளிநாட்டு பயங்கரவாதம்’ என்ற பிரிவின்கீழ் வருகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட இது குறித்த சட்டப்பிரேரணை, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாகியது.
மேற்படி பிரிவின் பிரதான நோக்கமே, ஒரு நாடு அதாவது ஒரு நபர் வசிக்கும் நாடு, மற்றொரு நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பு, அல்லது நபரை பற்றிய தகவல் அறிய, உதவ வேண்டும் என்பதேயாகும். குறிப்பிட்ட நபரால் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்தால், அந்த நபரை கண்காணிக்கும்படியோ, கைது செய்யும்படியோ கோரலாம். தகுந்த காரணங்கள் அல்லது தடயங்கள் காட்டப்பட்டால், இன்டர்போல் மூலம் கைது செய்வதற்கான பிடிவிறாந்தும் பெறப்படலாம். இலங்கை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டிருக்கும் பெயர்ப் பட்டியலில் பலருக்கு இன்டர்போல் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டிருக்கும் பெயர் விபரப்பட்டியலானது சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பட்டியல் என்றும் அதாவது இலங்கை பாதுகாப்புத் தரப்பினரின் இணையத்தளங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்த பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் என்றே தெரிய வருகின்றது. இந்த பழைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களின் பெயர் விபரங்களே, அநேகமாக இப்போது வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்ப் பட்டியல் உள்ளவர்களுள் ஓரிருவர் ஏற்கனவே இறந்துள்ளதும், சிலர் எங்கிருக்கிறார்கள் அவர்களின் விலாசம், தற்போது எங்கிருக்கின்றார்கள்? போன்ற விபரமெதுவும் தெரியாத நிலைமையையும் காணக் கூடியதாகவுள்ளது.
அந்த பட்டியலின் 11ம் பக்கத்தில் குறித்ததொரு நபரைப் தொடர்பான விபரங்களுள்ளன: கருணாநிதி துரைரத்தினம் அல்லது துரை, தொ.பே. இல :-0664656395, கடவுச்சீட்டு இல :கு 750320938 ,பிறந்த திகதி:-05.03.1969, விலாசம் (இலங்கை):வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை. விலாசம் (வெளிநாடு) :- 14, ரூ மயுரைஸ் பியுரோ, 93000 – பொபினி. பட்டியலிடப்பட்ட திகதி: 2014 பெப்புரவரி 25. ஆனால் மேலே பெயர் குறிப்படப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி மரணமடைந்துள்ளார் என்பதும். அவரது மரணஅறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் உலாவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருந்த போதிலும் அதே பழைய அறிக்கையை இலங்கையரசு தற்போது வர்த்தமானியில் வெளியிட்டிருப்பதன் காரணம் என்னவென்றால், அதனை வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் அவர்களைக் கைது செய்தால் அல்லது அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அமைப்போ அல்லது நாடோ இதுபற்றி கேள்வி கேட்க முடியாது என்பதற்காகவே என்பது தெள்ளத்தெளிவு.
இந்த பழைய அறிக்கையை முன்உதாரணமாகக் கொண்டு விரைவில் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிடப்படவுள்ளதாகவும் அதில் சுமார் 3000 பேர்களை இணைந்து சகல விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிடப்படவிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தடை செய்யப்பட்ட குறித்த பதினாறு அமைப்புக்களையும் சார்ந்தவர்கள், அவற்றில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள், நாடு கடந்த தமிழீழ அரசைச் சார்ந்தவர்கள் இவற்றுடன் தீவிர செயற்பாட்டாளர்களாக உள்ளவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
புதிய பட்டியலில், இந்த அமைப்புகளுடன் தொடர்பற்ற நபர்களும் உள்ளதாக தெரிய வருகிறது. சுமார் 3,000 பெயர்கள் அடங்கிய அந்தப் பட்டியல், பகுதி பகுதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த 3,000 பேரும் வெளிநாடுகளில் தற்போது வசிப்பவர்கள் தான். தற்போது தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களில் பெயர்கள் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இலங்கை மற்றும் வெளிநாட்டு முகவரிகள் (இந்திய முகவரிகளும் உள்ளன). அத்துடன் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை இலங்கை அரசு சிறப்பு அரசாணை ஒன்றில் வெளியிட்டுள்ளது.




இது இவ்விதமிருக்க மேற்படி தடைசெய்யப்பட்ட பதினாறு அமைப்புக்களில் எந்த அமைப்பினுடைய அழைப்பினையாவது ஏற்று இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வருகைதரும் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிதரன் எம்.பி, அனந்தி எழிலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார், கஜேந்திரன், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், வெளிநாடு சென்று இனிவரும் காலங்களில் இவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கெதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பூரண அதிகாரத்தை இலங்கை அரசாஙகத்திற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி மேற்படி அரசியல்வாதிகள் தடை செய்யப்பட்ட குறித்த அமைப்புக்களின் அழைப்பை ஏற்று வந்தால்கூட, அவர்களின் கூட்டங்களிலோ அல்லது அவர்களின் நிகழ்வுகளிலோ கலந்து கொள்வது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இனிவரும் காலங்களில் மேற்படி பதினாறு அமைப்புக்களின் அழைப்பிற்கிணங்க மாவீரர்தின நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் பட்சத்தில் இவர்கள் இலங்கை செல்லும் போது இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசுக்கு தற்போது பூரண அதிகாரம் கிடைத்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த 3000பேர் தொடர்பிலான தகவல்களையும் விபரங்களையும் பூரணமாக திரட்டுவதற்காக வெளிநாடுகளில் அமைந்திருக்கும் இலங்கையின் தூதுவராலங்கள் தம்மோடு தொடர்புகளைப் பேணுகின்ற தமிழ் அமைப்புக்களுடனும், புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்டவர்களுடனும் இது தொடர்பாக கலந்துரையாடி விபரங்களைத் திரட்டுவதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதனடிப்படையில் முழுமையான விபரங்களைத் திட்டியபின் குறித்த மூவாயிரம் பேர்களையும் அவர்கள் தொடர்பிலான முழு விபரங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு அதனைத் தொடர்ந்து இவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நம்பப்படுகின்றது.
- See more at: http://www.athirady.com/tamil-news/infomation/354510.html#sthash.RyL6ghfh.KrAFDYBw.dpuf
« PREV
NEXT »