Latest News

April 09, 2014

வடக்கில் தொடரும் அவசரகால கைதுகள் அதன் பின்னரான சித்திரவதைகளை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்
by admin - 0

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள அபாயகரமானதும், அவலமானதும் ஆன சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கும், தமிழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் அறிய முடியாமல் இருக்கும் பாதகமான நிலைமை தொடர்பிலும் அரசை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறைவு பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் வடக்கில் எத்தகைய ஆயுத மோதல்களும் அசம்பாவிதங்களும் இடம்பெறாத சூழலில் அமைதியை குலைத்து மக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்சமும் பதற்றமும் நிறைந்த சூழலை சமகாலத்தில் மகிந்த ராஜபக்ஸ அரசு வலிந்து தோற்றுவித்துள்ளது. வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அரச படைகளின் தீவிர சோதனை கெடுபிடிகள், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அரச படைகளின் திடீர் சுற்றி வளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளினால் இதுவரையில் 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை அரசு கூறுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே சிறைகளில் இருந்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கமையவே விடுதலையாகியிருந்தனர் என்பதும், அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறியவர்கள் என்பதும் கவனத்துக்குரியவை. மீண்டும் இவர்களை கைது செய்தல் என்பது அரசின் மீள் இணைப்பு சமுக மயப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
தொடரும் கைது மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் பாரிய அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சிவில் சமுக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இத்தகைய இராணுவ பலோத்கார அழுத்தங்களால் தமது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை முன்னெடுப்பதில் மக்கள் பல்வேறு தாக்கங்களை சந்தித்துள்ளனர்.
அரச பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்காக இளைஞர்களும் யுவதிகளும் தமது உயிரை பணயம் வைத்து ஆபத்தான கடல் வழிப்பயணங்கள் ஊடாகவோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்கள் மூலமாகவோ நாட்டைவிட்டு பெயர்க்கப்படும் அல்லது நிரந்தரமாகவே துரத்தப்படும் தமிழர் இனப்பரம்பல் விகிதாசாரத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
வள்ளிபுனத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி தனது மன வருத்தத்தை கூறுகையில்,
‘எனது கணவர் ஏற்கனவே இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு பெற்றிருந்த நிலையிலேயே விடுதலையாகியிருந்தார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை எங்களுடைய குடும்பத்தினை மீண்டும் நெருக்கடி நிலைக்குள்ளேயே தள்ளியிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றே கருதுகின்றோம். துயரமும் அவலமும் நிறைந்த நாளாந்த வாழ்க்கையையே சுமக்க வேண்டிய நிலையில் நாம் அல்லல்படுகின்றோம்’ என்று தெரிவித்தார்.
பொது அமைதி வாழ்வுக்கு எவர் ஊறு செய்விக்கிறார்களோ, இன்னல் விளைவிக்கிறார்களோ அவர்கள் குற்றவாளிகளே. அந்தவகையில் மகிந்த ராஜபக்ஸ அரசு மிகப்பெரிய குற்றவாளி அரசாகும். சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மீண்டும் விடுதலைப்புலிகள் என்பதொரு மாயையை ஏற்படுத்தி, அப்பாவி இளைஞர்களினதும், குடும்பஸ்தர்களினதும் இயல்பு வாழ்க்கையை சிதைத்து மிக மோசமான மனித உரிமை மீறல்களில் இந்த அரசு ஈடுபட்டுவருகின்றது.
இத்தகைய அவலமான சூழலில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கும், எமது மக்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »