Latest News

April 28, 2014

அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி - பிளக்ஸ் பேனர்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
by admin - 0

தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் செல்வம், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோர் தேர்தலில் களம் இறங்கினர். தேர்தல் நாளன்று ஓரிரு சிறு, சிறு அசம்பாவித சம்பவங்களைத் தவிர அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே. பரிமளம் சார்பில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலையான காந்திசாலை வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே  4 பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ''அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம்'' என்று அந்த பிளக்ஸ் பேனர்களில் வாழ்த்து செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு பேனரில் ''40 எம்.பி.யையும் பெற்றோம்'' என்ற வாக்கியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிளக்ஸ் பேனர்களால் காஞ்சிபுரத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் கடும் போக்குவர்த்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.


அடுத்த சில நொடிகளில் காஞ்சிபுரம் தாசில்தார் பானு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சர்ச்சைக்குரிய பேனர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை அகற்ற உத்தரவிட்டார். உடனடியாக பேனர்கள் காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
« PREV
NEXT »