Latest News

April 07, 2014

தமிழ்ப் பெண்கள் பாலியல் வதைகளை வெளிப்படுத்திய AFP ஏஎவ்பிக்கு சிறப்பு விருது
by admin - 0

சிறிலங்காவின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில், போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பாக எழுதிய செய்திக்காக, ஏஎவ்பி செய்தி நிறுவனத்தின் புதுடெல்லி முகவர் Charlotte Turner மனிதஉரிமை ஊடக சிறப்பு விருதைப் பெற்றுள்ளார்.
ஹொங்கொங்கில் நேற்று நடந்த மனிதஉரிமைகள் ஊடக விருது விழாவில், தெற்காசியாவில் மனிதஉரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், ஏஎவ்பி எனப்படும் பிரான்ஸ் செய்தி முகவரகத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் சிறிலங்காவின் வடக்கில் போரினால் கணவனை இழந்த பெண்கள் பாலியல் ரீதியாக எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஏஎவ்பி செய்தி நிறுவனத்தின் புதுடெல்லி முகவர் Charlotte Turner எழுதிய கட்டுரைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் சிறார் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரைக்காக, நேபாளத்தில் உள்ள ஏஎவ்பி முகவர் அம்மு கண்ணம்பிள்ளை முதல் பரிசு பெற்றுள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடிந்து விழுந்த ராணா பிளாசா கட்டடம் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்களுக்காக டாக்காவிலுள்ள ஏஎவ்பி ஒளிப்படப்பிடிப்பாளர் முனீர் உஸ் சமனுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
பான் ஏசியா விருது எனப்படும் இந்த விழாவை, ஹொங்கொங் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் கழகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஹொங்கொங் பிரிவு என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.
« PREV
NEXT »