Latest News

March 11, 2014

பௌத்தமயமாக்கப்படும் தமிழ்ச்சூழல்! முல்லையில் அரங்கேறுகிறது…
by admin - 0

அரசமரச்சூழலும் குன்றுப்பகுதிகளும் எங்கெங்கு காணப்படுகிறதோ அங்கெல்லாம் பௌத்தமத அடையாளங்கள் நிறுவப்பட்டு அவை தமிழ்ச்சமுகத்தினுள் திணிக்கப்பட்டு வரும் நிலையானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மக்களின் கவனத்தை இலகுவாக ஈர்க்கவல்ல பகுதிகளில் தமிழர்களின் உணர்வுகளை சிதைத்து அவர்களின் நிலத்தை அபகரித்து அங்கே பௌத்த மத அடையாளங்களை நிறுவுதல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரங்கேறியவண்ணம் உள்ளது.

இதே போல் கொக்கிளாய் பிரதேசத்தில் சமீப காலத்தில் எழுப்பப்பட்ட புத்தர் சிலையும் அதனை அண்மித்ததான கட்டிடமும் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் அவர்கள் அனுமதியின்றி கட்டப்பட்டு இருக்கிறது. இதுவும் அரசமரம் ஒன்றின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் காணியின் சொந்தக்காரர்களில் ஒருவரான மணிவண்ணதாசன் என்பவரால் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதியமலை மக்களின் புனித வழிபாட்டு தலமாக இருந்து வந்துள்ள மலையடி வைரவர் கோயில் பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு இருப்பதும் சமீபத்தில் பௌத்த மதத்தலைவர் ஒருவர் அங்கு வந்து சென்றதும் மேற்படி ஒதியமலையிலும் புத்தர் சிலை அமையபெற்றுவிடுமோ என்ற எண்ணம் ஒதியமலை மக்களை ஆட்கொண்டுள்ளது.இவை தவிர ஒட்டுசுட்டான் பகுதியில் இராணுவ முகாம் அமைத்து அதனுள் பெரிய அளவில் விகாரை கட்டப்பட்டு இருப்பதும் தமிழர்களின் பாரம்பரிய மத அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் கன்னிமார் கோயிலுக்கு அண்மையில் மற்றும் நாயாறு நீராவியடி ஏற்றத்தில் முன்பு இருந்த பிள்ளையார் சிலை காணாமல் போய் அதற்கு பதிலாக பௌத்த விகாரை அமைந்திருப்பது உள்ளடங்கலாக பல பிரதேசங்களிலும் தமிழர்களின் மத அடையாளங்கள் அழிக்கப்படுவதும் பௌத்தமத அடையாளங்கள் நிறுவப்படுவதும் நடைபெற்றவண்ணமே உள்ளது.
இவ்வாறு ஆங்காங்கே நிறுவப்படும் பௌத்த மத அடையாளங்கள் காலப்போக்கில் தமிழர் தேசங்களில் பௌத்த மதம் இருந்தமைக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட்டு பௌத்த மத சிங்கள குடியேற்றங்களின் திட்ட மிட்ட நில ஆக்கிரமிப்புகளுக்கு ஏதுவாக அமைந்துவிடும் என்ற நிலையும் இங்கு கவனிக்கபடவேண்டியதாகிறது என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments