இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையானது எதிர்காலத்தில் எமக்கெதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் நிலைமை வரை செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஜெனீவா தொடர்பாக அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டிய தருணத்தில் பலாத்காரமாக தேர்தலை புகுத்தி அரசாங்கமே கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பியது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி.யி பொது செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கு அமெரிக்காவிற்கு அருகதை கிடையாது ஏனென்றால் உலகம் முழுவதும் நாடுகளுக்குள் பலாத்காரமாக அமெரிக்கா புகுந்து அட்டகாசம் புரிந்தது. மக்களை எதுவிதமான இரக்கமும் இல்லாமல் கொன்று குவித்தது.
எனவே, எமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவருவதை கடுமையாக எதிர்க்கின்றோம்.
எமது நாட்டுக்கு எதிராக பயங்கரமான பொய்யான குற்றச்சாட்டுக்கள் இப்பிரேரணையில் உள்ளன. அதேவேளை அரசாங்கத்தால் நிறைவேற்றக்கூடிய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இப்பிரச்சினையை நோக்கினால் அரசாங்கத்தின் பிழைகள் காரணமாகவே அமெரிக்கா தலையீடு உருவானது.
நாட்டில் மனித உரிமைகளை ஜனநாயகத்தை அரசாங்கம் பாதுகாக்கவில்லை. கொலைகள், ஊடக அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்கள், கடத்தல், கொலை என நாட்டிற்குள் அராஜகங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
இதற்கு சிறந்த உதாரணம் கட்டுநாயக்க பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தபோது அதற்கு பொறுப்பேற்று பதவி விலகிய அன்றைய பொலிஸ் மா அதிபர் வெளிநாடொன்றில் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மனித உரிமையை மீறிய ஒருவர் தூதுவராக நியமிக்கப்பட்டால் எவ்வாறு அந்த நாடு மனித உரிமை தொடர்பாக அத்தூதுவரது கருத்தை ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு எந்தவிதமான ராஜதந்திர அறிவும் இல்லாதவர்களே வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் எவ்வாறு ஜெனீவா பிரச்சினையை கையாள முடியும். அத்தோடு வெளிநாடுகளுக்கும் உள்நாட்டுக்கும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அரசாங்கம் விட்ட பிழைகள் காரணமாகவே அமெரிக்கா பிரேரணையை கொண்டு வருகின்றது. இதனால் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதும் அரசாங்கமேயாகும். எனவே, அமெரிக்காவின் தலையீடுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கைக்கு எதிராக நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்கா ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரேரணையை முன் வைக்கவுள்ள சூழ் நிலையில் எதிர்கட்சிகள் நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.
ஆனால் அதிலிருந்து எதிர்கட்சிகளின் கவனத்தை அரசாங்கமே திசைதிருப்பியது. பலாத்காரமாக தேர்தலை அறிவித்து எதிர்க்கட்சிகளின் கவனத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்கு திசைதிருப்பியது.
ஏன்? ஜெனீவாவை காட்டி தேர்தலை முதலில் வெற்றிக் கொள்வதே அரசின் இலக்காகும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
No comments
Post a Comment