Latest News

March 01, 2014

எமது நாட்டு பிரஜையாக இருந்தாலும் விடுதலை தொடர்பில் நாம் தலையிட முடியாது; பிரித்தானிய தூதுவர் யாழில் தெரிவிப்பு
by admin - 0

பிரித்தானிய பிரஜைகள் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது எமது அரசாங்கத்தினால் விடுதலைக்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார். பிரித்தானிய பிரஜைகள் மற்றும் அந்தநாட்டில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் என தற்காலிகமாக இலங்கையில் தங்கியிருப்போருக்கு ஏற்படும் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய உதவிகள் மற்றும் வழங்க முடியாத உதவிகள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போது மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு மரணம் அடைந்த தங்கள் நாட்டு பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸனின் விடுதலைக்கு பிரித்தானிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்ததா என  ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. 

ஏனெனில் சிறையில் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுடைய விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது. எனினும் அவர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட நலன்சார் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அந்தவகையில் மரணமான கோபிதாஸன்  சிறையில் இருக்கும் காலத்தில் அவருக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்தோம். அத்துடன் அவரது நிலை குறித்தும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளையே எம்மால் மேற்கொள்ள முடியும் என்றார். 
« PREV
NEXT »

No comments