இலங்கையில் இரண்டு தரப்புக்களினாலும் இழைக்கப்பட்டவை என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் ஆரம்ப உரை நிகழ்த்துகையில், பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வேரா தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-
ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தக் கவுன்ஸில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து அறிக்கையிடுமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டது.
இலங்கையில் மோதல் காலத்தில் இரு தரப்புகளினாலுமே இழைக்கப்பட்ட உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நம்பத்தகுந்த, சுயாதீனமான விசாரணையை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு தவறிவிட்டது.
தொடர்ச்சியாக மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன அல்லது இவை தொடர்பில் ஐ.நா. வழங்க முன்வந்த தொழில்நுட்ப உதவிகளை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
இலங்கை விடயத்தில் சர்வதேச நடவடிக்கைக்கான நேரம் வந்துவிட்டது.
நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆரம்பித்துப் பெற்றுக் கொண்ட அந்த அவதானிப்புகள் தொடர்பில் செயற்படவும், உண்மையை நிலை நிறுத்தவும் கவுன்ஸிலுக்குக் கடமை உண்டு.
இது விடயத்தில் நாம் தவறுவோமானால் அது எங்களை எங்கே கொண்டு போய்விடும்….?
இது விடயத்தில் நாம் தவறுவோமானால் அது எங்களை எங்கே கொண்டு போய்விடும்….?
இரண்டு தரப்புகளினாலுமே இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதில் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நாம் அனைவரும் ஐக்கியப்பட முடியும் என நான் நினைக்கிறேன். அப்படி நாம் செய்வது நின்று, நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழி சமைக்கும்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கான ஆதரவு, தொழில்நுட்ப உதவி மற்றும் இந்தக் கவுன்ஸிலில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளில் கூட்டாக வெளிப்படுத்தப்படும் கவலைகள் என்பன இலங்கையில் நிலையான சமாதானம், நல்லிணக்கம் ஆகியவை முன்னேற்றகரமான பாதையில் நகர்வதை உறுதிப்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் என நான் நம்புகிறேன். – என்று பிரிட்டிஷ் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயத்தில் பிரிட்டன் தரப்பு தனது ஆரம்ப உரையில் ‘சுயாதீன விசாரணை’ குறித்தே பிரஸ்தாபித்திருக்கின்றது. ‘சர்வதேச சுயாதீன விசாரணை’ குறித்து அத்தரப்பு குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கை விடயத்தை ஒட்டி பிரிட்டிஷ் பிரதமா டேவிற் கமரூன் அண்மைக் காலத்தில் சூடாக கருத்து வெளியிட்டு வந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு அழைப்பு விடுக்க பிரிட்டன் தவறியிருப்பது இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பித்தக்கது.
https://link.brightcove.com/services/player/bcpid1722935254001/?bctid=3284795579001&autoStart=false&secureConnections=true&width=480&height=270
No comments
Post a Comment