Latest News

March 06, 2014

ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுப் பாரிய போராட்டத்தில் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன்
by Unknown - 0

றீலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, இன அழிப்பு புகைப்பட கண்காட்சி ஐ.நா முன்றலில் இடம்பெற்று வருகின்றது.

இனஅழிப்பிற்கு நீதி கேட்டு சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் ஆதாரங்களான புகைப்படங்கள் பன்னாட்டு இராஜதந்திரிகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்ட களத்தில் இறங்குமாறு மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விடயம் மிகப் பிரதான இடத்தை பெறுவதற்கான முன்னாயத்தங்களும், ஆருடங்களும் இப்போதே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு வலுவான காரணங்களை இலங்கை இன்னமும் வைத்திருப்பது, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெறாத எமது விடுதலைப் போராட்டம் மேலும் வீரியம் பெறுவதற்கான வழியை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
நம்மில் பலர் முள்ளிவாய்க்கால் போரனர்த்தத்தை எம் விடுதலைப் போராட்டத்துக்கு நிகழ்ந்த பெரும் பின்னடைவாகவும், விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கணம் அதுவெனவும் பிரசாரம் செய்கின்றனர். இதை முடிவாக வைத்தக் கொண்டு விவாதிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, சர்வதேசம் நோக்கிய எமது பார்வையையும், சர்வதேசத்தின் எம்மீதான கரிசனையையும் விசாலப்படுத்தியிருக்கின்றது. ஒரு தீவுக்குள், ஒரு மூலையில் சில வெடிச்சத்தங்களுக்குள் முழங்கிக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் சர்வதேச அரங்கை எட்டியிருக்கிறது.
பல தேசங்களில் அறிமுகமும், அனுதாபமும், எம்மை நோக்கி விழுந்திருக்கிறது. இது எமக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. பயங்கரவாதம், தீவிரவாதம் என எம் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருந்த உலகம், நம் பக்கம் தாவியிருப்பது விடுதலையின் உச்சத்தில் நடந்திருக்கும் ஒருவிடயமாக பார்க்கப்படவேண்டும். மாறாக இது பின்னடைவோ அல்லது தோல்வியோ அல்ல.
அதற்காக அனைத்தையும் உலகம் பார்த்துக்கொள்ளும், நாம் எம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என்று பின்வாங்கிக் கொள்வது சரியான செயலல்ல. முன்பை விட பெரும் உத்வேகத்துடனும், அறிவுசார் சாதூரியத்துடனும் இந்தக் களத்தில் நாம் போராட வேண்டியிருக்கிறது.
முதலில் நாம் இலங்கை அரசு என்ற பயங்கரவாதத்துடன் மட்டுமே போரிட வேண்டியிருந்தது. இப்போது சர்வதேச அரங்கில் பல அணிகள். எமக்கு ஆதரவாகவும், எதிராகவும், இலங்கையை காப்பாற்றும் நோக்கிலும் அணிதிரண்டிருக்கின்றன. இந்தக் களம் அபாயகரமானதும், முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு அணுகப்படவேண்டியதும் ஆகும்.
ஆனால் நாம் இதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இனப் படுகொலை, இன அழிப்பு, போர்க்குற்றம் என மனித குலத்துக்கு எதிரான அத்தனை குற்றங்களையும் புரிந்திருக்கும் இலங்கை அரசுக்கு தகுந்த பாடம் புகட்டவும், விடுதலையை வென்றெடுக்கவுமான செயற்பாடுகளை கையிலெடுக்க வேண்டும்.
இந்தக் குற்றங்கள் நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் எம்மிடமும், சர்வசேத சமூகத்திடமும் வலுவாக இருக்கின்றன. குருதிக் கொப்பளிக்கும் அந்த ஆதாரங்கள் காய்ந்து கருகி, வீணாவதை தடுக்க நாம் ஓரணியில் திரள வேண்டும்.
எல்லா அணுகுமுறைகளும், தீர்மானங்களும் ஏதோ ஒரு நலனின் அடிப்படையில்தான் முன் மொழியப்படுகின்றன என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. எமக்காக கனிந்திருக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, இறுதி வெற்றியை நாமே பெற்றுக் கொள்ளவேண்டும்.
அதற்கு ஒரு படியாக, ஒரு வழியாக நான் ஜெனீவா முன்றலில் நடத்திவரும், இனப் படுகொலை ஆதாரங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுக்கு அனைத்து புலம்பெயர் தமிழர்களும் ஒத்துழைப்பு வழங்குங்கள். எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நாவின் 25 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடரையும், அதில் கலந்துகொள்ளும் சர்வதேசத்தினரையும் எம் பக்கம் ஈர்க்கும்வகையில் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.
சிறீலங்கா அரசின் சதித் திட்டங்களாலும், எம்மிடையே கலந்துவிட்ட ஒற்றுமையின்மை- துரோகத்தனத்தாலும் ஈழத்திலும், புலத்திலும் சிதைந்துகிடக்கும் நாம் இந்தத் தருணத்திலாவது ஒன்றிணைய வேண்டும்.
இன விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததும், மீண்டும் அதை சர்வதேச அரசியல் ஆயுதமாக கையிலெடுத்திருப்பதும் இரண்டே அவைகள்தான். ஒன்று ஐ.நா சபை, மற்றையது ஐரோப்பிய பாராளுமன்றம்.
இந்த இரு உலகச் சபைகளையும் நம் பக்கம் இழுத்து, நமது நியாயாதை முரசறைந்து சொல்வதற்கு இனப்படுகொலைக் கண்காட்சி பெருந்துணைபுரியும். இது கடந்த வருட அனுபவமாகவும் இருக்கிறது. எந்தக் காரியங்களும் தனிமனிதர்களால் சாத்தியப்படுத்த முடியாது.
ஒரு கருத்தில் திரட்சியான சமூகத்தவராலேயே மாற்றங்களை துரிதப்படுத்திக் கொள்ள முடிகிறது. விதி எம் பக்கம் வந்து நிற்கையில் நம் போராட்டங்களை துரிதப்படுத்தவும், நேர்த்திப்படுத்தவும் வேண்டும். அதற்கான ஒரு வாயிலை இந்த இனப்படுகொலை கண்காட்சி திறக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு என மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments