Latest News

February 04, 2014

வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் புறக்கணிப்பு; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
by admin - 0

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.   போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெற்ற போதிலும் நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.   மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.   அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டிலே போர் ஆரம்பிக்கப்பட முன்னர் தமிழர்கள் கல்வியில் உயர்தர நிலையில் இருந்துள்ளார்கள். அவர்களது கற்றல் ஆற்றலை அழிக்க வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள்.   கிழக்கு மாகாணத்தில் கல்வி ரீதியாக ஒடுக்கப்படும் துர்ப்பாக்கிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அதிக கூடியபுள்ளிகளை தமிழ்ப் பரீட்சார்த்திகள் பெற்றனர்.   ஆனால் அந்தப் பரீட்சை பெறுபேறுகள் மாற்றியமைக்கப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சுமார் 40 பேர் சிங்களவர்களும் 15 பேர் தமிழர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.   இதில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் நியமிக்கப்பட விருப்பதோடு 15 தமிழர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கவுள்ளார்கள்.    இதுதானா இன விகிதாசாரம்? போட்டிப் பரீட்சையில் கூடிய பெறுபேறுகளைப் பெற்றும் பதவியைப் பெறமுடியாது ஒடுக்கப்படும் இனமாக இன்று கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.   இவற்றையயல்லாம் கண்டு நாங்கள் சோர்ந்துவிடவில்லை; இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து எமது உரிமைக்காக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.    எமது மக்களின் கல்வி உரிமை, மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதே போன்று பல திணைக்களங்களில் பெரும்பான்மை இனத்தை மையமாக கொண்டு சிற்றூழியர் நியமனங்கள் நடைபெறவுள்ளன. இதனை தடுக்கும் வகையில் நாங்கள் பல நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம். என்றார். 
« PREV
NEXT »

No comments