Latest News

February 08, 2014

இலங்கை போரில் இரசாயன ஆயுதங்கள்! ஒரு கி.மீ. சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியது நாங்கள் தான்!- போரில் பங்கேற்ற இலங்கை படைச்சிப்பாய்
by admin - 0

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன.
போர் முடிந்து இன்றும் இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளது என்பதையும் இவ்வறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை மையப்படுத்திய 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army)  என்ற எனது ஆவணப்படம் கடந்த ஜனவரி 30 -பெப்ரவரி 1 அன்று பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு ஏற்பாட்டில் நடைபெற்ற 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாட்டில்  வெளியிடப்பட்டது.
முதல் நாள் ஜனவரி 30 அன்று லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று நிமிடமும, அடுத்த நாள் பெப்ரவரி 1 அன்று யுனிவர்சிட்டி கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்வில் முழு ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலிடேயும்,ஓக்லாந்த் நிறுவனத்தின் அனுராதா மிட்டல் இன்னும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மனித உரிமையாளர்களும், பேராசிரியர்களும், செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் கூறப்படும் போரில் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களை மையமாக வைத்துக்கொண்டு, நான் இலங்கை இராணுவத்தை குற்றம் சொல்ல இங்கிலாந்து பாராளுமன்றத்தை பயன்படுத்தியதாக இலங்கை அரசுத் தரப்பு குறிப்பிடுகிறது.
இரசாயன ஆயுதங்கள் விசயத்தையோ, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் கிபீர் தாக்குதல் பற்றியோ நானாக குற்றம் சாட்டவில்லை, போரில் பங்குபற்றிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இதை இப்படத்தில் வெளியாகியுள்ள பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி போருக்கு பிறகு இன்று நிலங்களை திருப்பி தமிழ் மக்களுக்கே கொடுப்பதாகவும் இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது.
ஆனால் நில அபகரிப்பின் அடிப்படை தொடங்கி, இன்று இராணுவ மயமாக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் எப்படி திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறது என்பதையும், இராணுவம் நிலத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுப்பதில் உள்ள உண்மைநிலை என்ன என்பதையும், இப்படி இன்னும் இன்னும் வடகிழக்கில் அரங்கேறி வரும் இராணுவ அத்துமீறல்களையும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ நில அபகரிப்பு தொடர்பாக இப்படத்தில் எடுத்து கையாளப்பட்ட முக்கியமான ஆதாரங்கள் யாவும் இலங்கை அரசு நியமித்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையிலிருந்து தான் எடுக்கப்பட்டது.
இலங்கை அரசின் கருத்துப்படி இராணுவம் பெரும்பான்மையாக நிலைகொண்டுள்ள வடகிழக்கில் சுதந்திரத்தின் காற்று வீசுகிறது என்றால் அங்கு இன்னும் ஏன் சர்வதேச மனித உரிமையாளர்கள்-பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை?
அங்கு பயணித்த போது இராணுவ முகாம்களை படமெடுத்ததாக ஏன் நான் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் தீவிரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டேன்?
இராணுவம் வடகிழக்கில் செய்வது நியாயம் என்றால், பாதுகாப்புக்காக தான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றால் கமராவின் கண்களுக்கு இன்னும் இலங்கை இராணுவம் அஞ்சுவது ஏன்?
தவறுகள் உள்ள இடத்தில் தான் தடைகளும் கட்டுப்பாடுகளும் அஞ்சுதலும் பெருகி இருக்கும். அந்த தடைகளுக்கு அப்பால் உள்ள காட்சிகளையும், இன்றைய வடகிழக்கு நிலத்தின் எதார்த்தத்தையும், போரின் போது இசைப்பிரியாவை போன்று இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தை நேசிக்கும் மக்கள் முன்வைத்துள்ளேன்.
- மகா.தமிழ்ப் பிரபாகரன்
« PREV
NEXT »

No comments