Latest News

February 09, 2014

வெங்காயத்தினால் வடக்கு விவசாயிகள் கண்ணீர் விட மாட்டார்கள்; நம்பிக்கை வெளியிடுகிறார் விவசாய அமைச்சர்
by admin - 0

வடக்கில் வெங்காயத்தினை உற்பத்தி செய்பவர்கள்மீண்டும் பொருளாதார ரீதியாக உயர்வடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர்களின் உயர்வுக்கு விவசாய அமைச்சு எப்போதும் பக்கபலமாக இருக்கும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். விதைவெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ் மாவட்ட பிரிதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறீபாதசுந்தரம் தலைமையில் வயல் விழா நிகழ்வு  கைதடியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெங்காயச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக மிக உயர்வான நிலையில் இருந்துள்ளார்கள். 

அதன்படி வெங்காய வருவாயில் வீடுகட்டிய விவசாயிகளையும் வாகனங்கள் வாங்கிய விவசாயிகளையும் எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு இலாபம் ஈட்டக்கூடிய ஒரு பயிராக வெங்காயம் இருந்துள்ளது. ஆனால், போர் எல்லாவற்றையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து  இப்போதுதான் எமது விவசாயிகள் மீண்டும் நிமிரஆரம்பித்துள்ளார்கள் கடந்த ஆண்டில் வடக்கில் 78,000 மெற்றிக் தொன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. 

இதில் மிகப் பெரும்பங்கு யாழ்ப்பாணத்திற்கு உண்டு.   எனவே இலங்கையின் மொத்த வெங்காய உற்பத்தியில் எமது விவசாயிகளின் உற்பத்தி அரைவாசிக்கும் அதிகமாகும். எனினும் யாழ்ப்பாணத்தில் விளைகின்ற வெங்காயத்தின் தரம் தென்இலங்கை வெங்காயத்தை விட உயர்வானது. அத்துடன் எமது வெங்காயத்துக்கான சந்தை வாய்ப்பு எப்போதும் தென்இலங்கையில் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் வெங்காய உற்பத்தியை வடக்கில் அதிகரித்தால் அதிக வருவாயை நாங்கள் பெறலாம். மேலும் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் புகையிலையை நம்பியிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், உலகளாவிய ரீதியில் புகைப்பிடித்தலுக்கு எதிரான போக்கு உருவாகி வருவதால் புகையிலைச் செய்கை குறைவடைந்து போகின்றது. அத்தோடு, புகையிலையில், பெரிய இலைகள் தோன்றுவதற்கு அதிக அளவு நைதரசன் பசளைகளை இடவேண்டியுள்ளது.அதனால்நிலத்தடி நீர் மாசுபட்டு வருகின்றது இதனால் புகையிலைக்கு மாற்றாக விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஓரு பயிராக இன்று வெங்காயமே உள்ளது. இருப்பினும் தரமான வெங்காய விதைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதற்கான விதைகள் இந்தியாவிலிருந்தே அதிகம் எடுத்து வரவேண்டியுள்ளது. இதனால் வடமாகாண விவசாயத் திணைக்களம் விதைகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விதை வெங்காய உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றது. அது இப்போது கைதடியில் சாத்தியமாகியுள்ளது. எனவே எமது வெங்காய உற்பத்தியாளர்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக உயர்வடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம். வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால் வடக்கின் விவசாயிகளை வெங்காயம் ஒருபோதும் கண்ணீர்விட வைக்காது என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு வடமாகாணசபை  உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோருடன் விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். 
« PREV
NEXT »

No comments