Latest News

February 23, 2014

நந்திக் கடலில் நடந்த ரசாயன குண்டுவீச்சு! நெஞ்சை பதற வைக்கும் புகைப்படங்கள்
by admin - 0


நந்திக் கடலில் நடந்த ரசாயன குண்டுவீச்சு! நெஞ்சை பதற வைக்கும் புகைப்படங்கள்
சிறீலங்காவில் இறுதிப்போர் நடந்த 2009ம் வருடம் மே மாதம் 18, 19&ம் தேதிகளில் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் அந்த இரண்டு தினங்களில் சிறீலங்கா ராணுவம் அரங்கேற்றிய கொலைக்காட்சிகள் ஐ.நா. மன்றத்துக்கு எட்டியிருக்கிறது.

கொலைக்காட்சிகளை புகைப்படங்களாக அப்போது இலங்கை ராணுவத்தில் இருந்த சில நல்ல உள்ளங்களே கொடுத்திருக்கின்றன. அந்த புகைப்படங்கள்தான் இலங்கை அரசை போர்க்குற்ற கூண்டில் ஏற்றப்போகிறது என்கிறார்கள் ஈழ உணர்வாளர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் இருக்கும் புலித் தளபதிகள் கொல்லப்பட்ட நேரமும், தேதியும் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இலங்கை ராணுவம் நந்திக் கடலேறி பகுதியில் மிஞ்சிய புலிகளைப் பிடிக்க ரசாயன குண்டுகள் போட்டும், சுட்டும் கொன்றிருப்பதற்கு அந்த உடல்களே சாட்சி. சில படங்களில் பச்சை ரத்தம் கடலோடு கலந்திருக்கிறது. சில உடல்கள் நிறம் மாறி ரசாயன குண்டு வீச்சில் உருமாறியிருக்கிறது.

இந்நிலையில்தான் இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை தொடங்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு தலைவர் நவிநீதம் பிள்ளை பரிந்துரை செய்திருக்கிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா.சபை ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது. இலங்கைக்கு எதிராக எல்லா நாடுகளும் ஒன்றுதிரளும் சூழலில் சீனா மட்டும் சிங்கள அரசுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. லேட்டஸ்ட்டாக ரஷ்யாவும் சிங்களர் பக்கம் சாய்ந்திருக்கிறது.

இப்போது இந்தியாகூட ‘இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கும்’ என்ற நிலைக்கு வந்திருக்கிறது.


இந்தமுறை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி மேலும் பல போர்க்குற்ற ஆதாரங்கள் அடங்கிய ஆவணப் படத்தை வெளியிடப் போவதாகவும், அதில் சரணடைந்த 15 பெண் போராளிகளை சிங்கள ராணுவம் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்த காட்சிகளுடன், மேலும் சில ஆதாரங்களும் வெளியிட இருக்கும் தகவல்கள் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. அந்தப் படங்களில் இங்கு இடம்பெற்றிருக்கும் படங்களும் இடம் பெற்றிருக்கும் என்கிறார்கள் ஈழ உணர்வாளர்கள்.

அப்படி கசிந்த போர்க்குற்ற ஆதாரங்கள் பற்றிய மேலும் தகவலறிய விசாரணையில் இறங்கினோம். ‘‘வரப்போகின்ற ஆவணப் படத்தை காண்பதற்கு கனத்த இதயம் வேண்டும். சிங்கள ராணுவத்தின் நரவேட்டை சர்வதேசத்தின் முன் மேலும் அம்பலமாகும் தருணம் வரப்போகிறது’’ என்று ஒரு உணர்வாளர் இதுவரை வெளிவராத போர்க்குற்ற ஆதார படத் தொகுப்பைக் காட்டிப் பேச ஆரம்பித்தார்.

குறிப்பிட்ட ஒரு படத்தை சுட்டிக்காட்டி ‘‘இவர்தான் மாதவன் மாஸ்டர்’. போர் தொடங்கியதிலிருந்து இறுதிகட்டம் நெருங்கும்வரை அவர் களத்தில் நின்று போராடினார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய செய்தி இல்லை. தப்பினாரா என்ற சந்தேகமும் இருந்து வந்தது. ஆனால், இப்போது அவரின் சடலம் கிடைத்திருக்கிறது. புகைப்படமாக. கூடவே பலரின் புகைப்படங்களும், அதில் அதிர்ச்சி அடைய வைத்தது மாதவன் மாஸ்டர் புகைப்படம்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தொடங்கி, பொட்டம்மான் வரை தொடக்க கால நிர்வாகிகளோடு பல தாக்குதல் களத்தை கண்டவர். பல அதிரடி தாக்குதல்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர்.

ஒரு இயக்கத்தின் கண்களான ‘புலனாய்வு பிரிவு’ துறையின் ஆரம்பகால கர்த்தாவாக உயர்ந்து நின்றவர். உள்ளூரில் தொடங்கி நாடு கடந்து சர்வதேசம் வரை புலனாய்வில் பல நுணுக்கங்களையும், திட்டங்களையும் புகுத்தியவர்களில் முக்கியமான ஒருவர்.

அப்படியானவர்தான் முள்ளிவாய்க்காலின் நந்திக் கடலேறி பகுதியில் சடலமாக கிடக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சிங்கள ராணுவ தரப்பே எடுத்திருக்கிறது. கடைசி கட்டத்தில் சில ‘முக்கிய நகர்வுகள்’ & நந்திக் கடலேறி பக்கமாக நடந்துள்ளது. அதற்காக வேண்டி ஒரு அணி முன்கூட்டியே நகர்ந்து வேவு பார்க்கும் வேலையில் இருந்தது. மற்றொரு பிரிவு தாக்குதல் அணியாக சென்று இருக்கிறது. இதனையடுத்து கரும்புலிகள் அணியும் அங்கே சென்றிருக்கிறது. அதன்பிறகு அங்கே என்ன நடந்தது என்பதுதான் விடை தெரியாத மர்மமாக நீடிக்கிறது.

ஆனால், பெரும் சண்டை ஒன்று உக்கிரமாக வெடித்தது. சிங்கள ராணுவம் மழை போன்று குண்டுகளை பாய்ச்சியிருக்கிறது. சகலவித ஆயுதங்களும் அங்கே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பகுதி போராளிகள் களத்திலேயே வீரமரணத்தை தழுவியிருக்கிறார்கள். இன்னும் ஒரு பகுதியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. எஞ்சிய சிலர் பிடிபட்டார்களா அல்லது சரணடைந்தார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் உயிரோடவே இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் சித்ரவதை செய்து விசாரித்த பிறகே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதில் ஒரு போராளியின் கைகள் கயிறால் கட்டப்பட்டிருப்பதை கவனித்தால் தெரியும். சுட்டு படுகொலை செய்த பிறகே நந்திக் கடலேறி பகுதியில் வீசியிருக்கிறார்கள்.

இதில் மாதவன் மாஸ்டர் படத்தை மட்டும் சரியாக உறுதிப்படுத்த முடிந்தது. இவரை 2009, மே 18&ம் தேதி மாலை 5.38க்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பது புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இவரது மூக்கின் வழியாக பச்சை ரத்தம் வழிந்தோடியபடி இருக்கிறது. சிங்கள ராணுவ அதிகாரி உட்பட சிப்பாய் வரை சுற்றி நின்று பார்ப்பது பூட்ஸ் கால் தடங்களில் தெரிய வருகிறது.

மற்ற போராளிகளும் முக்கிய படையணிகளில் இருந்தவர்கள்தான். கடைசிகட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் பங்கு வகித்தவர்கள் எனும்போது முக்கிய நபர்களாக இருக்கவே வாய்ப்புண்டு. ஆனாலும் சரியான பெயர் விபரம் ஏதும் தெரியவில்லை. ஆனால், இந்த படங்களை ஒப்படைத்த சிங்கள ராணுவ வீரருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். காரணம் விசாரணை நடத்தியபோது போராளிகளின் வழியாக அறிந்து கொண்டிருக்கலாம். எதையும் சரியாக கூற முடியவில்லை. ஆனால், இந்தப் படங்கள் எல்லாமே ஐ.நா.வில் ஆவணப்படுத்தியிருப்பது மட்டும் உறுதி.

இந்த படங்கள் அனைத்தும் உச்சகட்ட இன அழிப்பு போர் நடந்த 2009, மே மாதம் 18&ம் தேதி மதியம் தொடங்கி மாலை 6.30 வரை எடுத்த புகைப்படங்களாகவே உள்ளது. அனைவரது உடலிலும் பச்சை ரத்தம் வழிந்தோடியபடியே இருக்கிறது. இன்னும் ஒரு தொகுதி படங்கள் மே 19&ம் தேதி மதியத்திற்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கின்றது.

மற்றுமொரு புகைப்படத்தில் ஒன்றாக குவிக்கப்பட்ட போராளிகளின் உடல்கள் இருக்கிறது. ரசாயன குண்டுவீச்சில் உடலின் தோல்கள் எரிந்து கருகி, வெள்ளையாக உரிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது. அருகில் ராணுவ வீரர்கள் சுற்றி நின்றபடி இருக்கும் அந்த புகைப்படம் 2009, மே மாதம் 18&ம் தேதி மாலை 3.36 மணிக்கு எடுத்திருக்கிறார்கள். அதேபோன்று உடல் கருகி வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் மற்றொரு புகைப்படத்தை மே 18&ம் தேதி மாலை 3.58 மணிக்கு எடுத்திருக்கிறார்கள். இந்த ரசாயன குண்டுவீச்சு எல்லாம் அன்று அதிகாலை தொடங்கி 12 மணிவரை நீடித்த உக்கிரமான தாக்குதலின்போதே நடத்தப்பட்டிருக்கிறது.

இப்படியான மேலும் பல போர்க்குற்ற ஆதாரங்களோடு பதினைந்து பெண் போராளிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்த ஆதாரங்களும் வெளியாக இருக்கிறது’’ என்ற தகவலை கனத்த மனதுடன் விவரித்தார் அவர்.

-பா. ஏகலைவன்
« PREV
NEXT »

No comments