நில அபகரிப்பை மேற்கொள்வதற்காகவே எமது பிரதேசத்துக்குப் பொருத்தமற்ற பயிர்களை நடுவதற்கான முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாகப் போர்த்தாக்கம் முடிவுற்ற பின்னர் பொருளாதார ரீதியான பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய திட்டங்கள் வடக்கு மாகாணத்துக்கு கொண்டு வரப்படுகின்றன என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்தார்.
முழங்காவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பப்பாசி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முழங்காவில் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
பப்பாசிப்பழம் எங்களைப் பொறுத்தவரையில் அதிகளவு தீண்டப்படாத பழமாகவே இருந்தது.
ஆனால் தற்போது ஏற்றுமதிக்கான ஒரு சந்தை வாய்ப்புக் கிடைத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதிகளில் இருந்து வருகை தரும் பழங்களுக்குக் கொடுக்கின்ற முன்னுரிமையை உள்ளூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பழங்களுக்கு நாங்கள் கொடுப்பதில்லை.
பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் எங்களுடைய விவசாயிகள் மிகுந்த அனுபவமும் பயிற்சியும் கொண்டவர்கள். இன்று போர்ப் பாதிப்புக்களால் நலிவடைந்து இருக்கின்ற ஒரு சமூகமாக உள்ளனர். இவ்வாறான நிலையில் ஏற்றுமதியுடன் கூடிய பப்பாசிச் செய்கை ஆறுதல் தரக்கூடியதாக இருக்கும்.
எமது பிரதேசத்தில் இலாபமாக வளரக்கூடிய பொருத்தமான பயிர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் உற்பத்தியாளர்கள் ஒன்றினைந்து கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாகப் பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
எமது பிரதேசத்தில் எந்தப்பயிரை நடுகை செய்யலாம் என்பது எமக்கே தெரியும். தீர்மானிக்க வேண்டிய உரிமையும் எங்களிடமே உள்ளது. சந்தனம், கரும்பு, இறப்பர் மரங்களை இந்த மண்ணில் நடுகை செய்யுமாறு நிலத்தைக் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. போர்ப் பாதிப்புக்கு பின்னர் எங்களை நோக்கி பொருளாதார ரீதியான வலைப்பின்னல்கள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வட மாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் எங்களுடைய மண்ணில் மேற் கொள்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.
No comments
Post a Comment