Latest News

February 20, 2014

மன்னார் மனிதப் புதைகுழி 74 ஆக உயர்ந்தது! இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு!
by admin - 0

27வது தடவையாக மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழி அகழ்வில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
மன்னார் நீதவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் விசேட சட்டவைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் இன்று வியாழக்கிழமை (20-02-2014) காலை 8:30 முதல் பிற்பகல் 2 மணிவரை குறித்த மனித புதைக்குழியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. இதன்போதே ஐந்து மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த எலும்புக் கூடுகளில் ஒன்பது இன்று புதைக்குழியிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பொதிசெய்யப்பட்டு மன்னார் வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதை குழியிலிருந்து எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமையும் மனித புதைக்குழி அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
« PREV
NEXT »

No comments