இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளும் இரசாயனக் குண்டுகளும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என தம்மிடம் மக்கள் முறையிட்டுள்ளதாகவும் மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அங்கும் பலர் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப்பிடம் மன்னார் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்பகுதியில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிக்கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்து இனங்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு சர்வதேசம் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறித்த தூதுவரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர்க் குற்ற விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கிற்கு வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆயரின் இல்லத்தில் யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோருடன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இச்சந்திப்புத் தொடர்பாக யாழ்.மறைமாவட்ட ஆயருடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கும் அதற்கான நிவாரணங்களைத் தேடுவதற்காகவுமே குறித்த தூதுவர் இலங்கைக்கு வந்துள்ளார். நான் குறித்த தூதுவரிடம் எடுத்துக்கூறிய விடயங்களை யாழ்.ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையும் குறித்த தூதுவருக்கு விளக்கியுள்ளார். யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக எடுத்துக்கூறியுள்ளோம். அந்த வகையில் வானத்திலிருந்து வீசப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் விமானத்திலிருந்து வீசப்பட்ட ''எயார் பம்ஸ்'' எனப்படும் தடைசெய்யப்பட்ட குண்டுகள் ஆகியவற்றினால் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாக எடுத்துக்கூறியுள்ளோம். இத்தகைய குண்டுகள் வானத்திலேயே அந்தரத்தில் வெடிப்பதால் அதிகமான பிரதேசங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய குண்டுகளாகும். இதேபோல் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட இரசாயனக் குண்டுகள் தொடர்பாகவும் குறித்த தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளோம். இத்தகைய இரசாயனக் குண்டுகளை முதன்முதலாக 2008ஆம் ஆண்டு 7ஆம் மாதக் காலப்பகுதியில் அக்கராயனில் பயன்படுத்தினார்கள். இத்தகவலை முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இருந்த மக்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல் கிளிநொச்சி, தர்மபுரம், புதுக்குடியிருப்பு ஆகிய வைத்தியசாலைகளில் மீதும் புதுமாத்தளன் பகுதியில் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கிவந்த வைத்தியசாலை மீதும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்று அநேக உயிர்கள் அங்கு பலி கொள்ளப்பட்டது.
இறுதியாக க.பொ.சாதாரண தர மற்றும் உயர்தரப் பிரிவு மாணவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்துக்கொண்டு போய் முதலுதவி பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்தபோது அந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அந்த மாணவர்கள் இறந்தார்கள். இந்த விடயம் தொடர்பாக நாங்களும் மக்களும் பேசிக் கொள்கின்ற விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.
மருந்தும், உணவும் ஆயுதம்
இதேவேளை மருந்தையும் உணவையும் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் என்ற விடயத்தையும் எடுத்துக்கூறியுள்ளோம். குறிப்பாக உணவுகள் பற்றாக்குறையாகக் காணப்பட்டதால் மக்களுக்குச் சிறியளவிலேயே கிடைத்தது. மருந்துத் தட்டுப்பாடும் காணப்பட்டது. இதேவேளை இங்கிருந்த வைத்தியர்களை அழைத்து அவர்களுக்குச் சொல்லப்பட்டதற்கு அமைய அவர்கள் அப்பகுதியில் மருந்துத் தட்டுப்பாடு இருக்கவில்லை என்பதை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு மருந்துத் தட்டுப்பாடு இருந்தது என்பது உண்மையாகும். இவை தொடர்பாக விரிவாக தூதுவர் ரெப்விடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
இதேவேளை மோதல் தவிப்பு வலயங்களாக முன்னர் சுதந்திரபுரத்தில் அமைக்கப்பட்ட வலயத்திற்குள் விடுதலைப்புலிகள் இருக்கவில்லை. அவர்கள் அதற்கு பின்னாலேயே இருந்துள்ளனர். ஆனால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து மாத்தளன் பகுதிக்கு சென்ற வேளையில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த மக்கள் இடம்பெயர்ந்து போகின்ற வழியிலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதேவேளை மாத்தளன் பகுதியில் மக்கள் சென்ற பின்னர் அங்கு மோதல் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள்ளும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். வலைஞர்மடம், மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளும் முன்னர் மோதல் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளும் சிறிய பகுதிகளாகவே காணப்பட்டது. இந்த பகுதிகளுக்குள்ளும் வெளியிலும் விடுதலைப்புலிகளும் நின்று தாக்குதல்களை நடத்தியதால் இருதரப்பினருடைய மோதல்களிலும் அநேகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இவர்களால் உருவாக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் விடுலைப்புலிகள் இருக்கிறார்கள் என்பதற்காக நம்பிக்கையுடன் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது. அவர்கள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தாலும் அந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லக்கூடாது. அது ஒரு பிழையான காரியமாகும். இவை தொடர்பாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறியுள்ளோம்.
ஆலயங்கள் மீது தாக்குதல்
இவைபோன்று ஆலயங்களில் மக்கள் தஞ்சமடைந்திருந்தபோது குண்டுகள் போடப்பட்டு மக்கள் கொல்லப்பட்டனர். முக்கியமாக நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஆகியவற்றில் மக்கள் தஞ்சமடைந்திருந்தபோது குண்டுகள் போடப்பட்டு மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இதேவேளை போர் நடைபெற்ற காலப்பகுதியில் அப்பகுதியில் இருந்து சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை வெளியேற்றியிருந்தனர். இவர்கள் அங்கிருந்து இவ்விடயங்களை அவதானிப்பார்கள் என்பதற்காக அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்கள். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் என்பனவற்றை அங்கிருந்து அவர்களின் விருப்பமின்றி அகற்றியுள்ளனர். போருக்குப் பின்னரும் அவர்களுடைய தேவைகள் இப்பகுதியில் காணப்படுகின்ற போதிலும் அவர்கள் இன்னமும் இங்குவரவில்லை. அதற்கு அவர்களுக்கு அனுமதியும் இல்லை. ஆதலால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்பதையும் தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளோம்.
இதேபோல் இங்கு நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலப்பகுதியில் செம்மணி என்ற இடத்தில் 500 பேர் வரை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நீதிவான் அப்பகுதியை தோண்டிப் பார்க்குமாறு தெரிவித்த பொழுது, அப்பகுதியை தோண்டிப் பார்த்த போது மூன்று, நான்கு பேருடைய தடயங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அது தொடர்பாகவும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம்.
அப்பகுதியில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு என்ன நடந்தது. அதேபோல் மாத்தளன் பகுதியிலும் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். அங்கும் என்ன நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
காணாமல் போனோர் விவகாரம்
சட்டத்திற்கு மாறாக கைது செய்யப்பட்டு காணாமற்போன நபர்கள் தொடர்பாக முழுமையாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளோம். ஏனெனில் மனிதனுடைய உயிருடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இதேபோல் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே வந்த பிற்பாடு அநாதைகளாக இருக்கின்றவர்களில் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கினர். உள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற இவர்களுக்கு உளவியல் ரீதியான புனர்வாழ்வு அளித்தலுக்கு எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு மக்கள் உளவலுவூட்டல் செயற்பாடுகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அதுவும் இன்னமும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை.
மக்கள் தொகையில் வித்தியாசம்
இதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்திற்குப் பின்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னருமான எட்டு மாதக் காலப்பகுதியில் வசித்தவர்களில் சனத்தொகைப் புள்ளிவிபரம் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்காலப்பகுதியில் வசித்தவர்களின் விபரங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் விரிவான அறிக்கைகளை கையொப்பமிட்டு சமர்ப்பித்துள்ளனர். இந்த மக்கள் இறுதியுத்தத்தின் போது வவுனியாப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். ஆனால் இந்த மக்கள் தொகைக்கிடையில் பெரியதொரு வித்தியாசம் காணப்படுகின்றது. இதற்கமைய ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 மக்கள் காணாமற்போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பான தகவலை யாருமே தெரிவிப்பதற்குத் தயாராக இல்லை. இவ்விடயம் தொடர்பாக நான் எனது ஆவணங்களுக்கு அமைய பலரிடம் கோரியபோதும் யாருமே எதையும் சொல்லவில்லை. ஆனால் என்னிடம் புலனாய்வாளர்கள் மட்டும் வந்து விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர்.
காணி அபகரிப்பு
காணி அபகரிப்பு எமது இனத்தை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அரசின் உதவியுடன் இடம்பெறுகின்ற குடியேற்றங்கள் அதாவது தமிழ் அரசியலை ஒரு தளம்பல் நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அரசின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற குடியேற்றங்களை நிறுத்துமாறு 56ஆம் ஆண்டு காலத்திலிருந்து சொல்லிக் கொண்டு வருகின்றோம். இதனை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரி வருகின்றோம்.
இதேவேளை மொழியை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் செய்யப்படுகின்ற திட்டங்கள், பெளத்த மதம் சார்பிலான பிரசார நடவடிக்கைகள், விகாரை அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளோம்.
வடக்கில் உள்ள இராணுவத்தின் தொகை தொடர்பாகவும் எடுத்துக்கூறியுள்ளோம். வடக்கில் யுத்தம் முடிவடைந்துள்ளது. நாம் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே எமக்கு ஒரு சிவில் நிர்வாகம் வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். இதேவேளை இராணுவத்தின் பிரசன்னம் இப்பகுதியில் அதிகரித்துள்ளதால் இறந்தவர்களை நினைவுகூருவதற்குக் கூட எமக்கு அனுமதியில்லை என்ற விடயத்தையும் எடுத்துக்கூறியுள்ளோம்.
எனவே இத்தகைய சூழல் இப்பகுதியில் நடைபெறுவதாகவும் இதனை மாற்றி நல்லதொரு சூழல் ஏற்படும் வகையில் அன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உண்மையும் நேர்மையுமான நல்லிணக்கமான ஒரு நிலைமையை உருவாக்கி சுமுகமான ஒரு நிலையை உருவாக்க முடியும். அதற்கொரு சூழலை இப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
போர்க்குற்றத்தை வெளிப்படுத்த வேண்டும்
இங்கு ஒரு போர்க்குற்றம் நடைபெற்றது என்பதை வெளிக்கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இதனை இந்த நாட்டினுடைய நன்மைக்காகவும் இந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்குடன் கோரியுள்ளோம். தனிப்பட்ட நபர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இதனை நாம் கோரவில்லை என்றார்.
ஆளுநர், முதலமைச்சருடனும் சந்திப்பு
இதேவேளை சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக் கையாளுகின்ற அமெரிக்காவின் விசேட தூதுவரான ஸ் ரீபன் ரெப் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இவர் உதயன் பத்திரிகையின் அலு வலகத்திற்கும் சென்று வடக்கின் தற் போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளார். குறித்த பத்திரிகை நிலையத்திற்குச் சென்ற ரெப் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரான கானமயில்நாதன் மற்றும் அப்பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின் போது வடக்கில் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்ற ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாக தூதுவருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதுடன் போர்க்குற்றங்கள் மற்றும் தற்போதைய மக்களின் நிலை தொடர்பான அறிக்கைகளையும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தூதுவரிடம் கையளித்துள்ளார்.
No comments
Post a Comment