ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. சனிக்கிழமை ஸ்கந்தபுரம், அக்கராயன்குளம், கண்ணகிபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஸ்கந்தபுரம் அ.த.க. பாடசாலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
காணாமல்போனோர் விவகாரம் தீர்வின்றி தொடர்ந்து வருகின்றது. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிய முடியாமல் அவர்களது உறவினர்கள் நாள்தோறும் பெரும் துக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். காணாமல் போன தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவினர்களை தேடிக்களைத்த நிலையில் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாது கலங்கியுள்ளனர்.
தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல்போனோரது உறவினர்கள் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். ஆனாலும், இவர்களது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கவே இல்லை. காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டுமென்று சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரைகளில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நூற்றுக்கணக்கான காணாமல்போனோரது உறவினர்கள் சாட்சியமளித்திருந்தனர். பெருமளவானோர் எழுத்துமூலம் தமது உறவுகளை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மகஜர்களையும் சமர்ப்பித்திருந்தனர். நல்லிணக்க ஆணைக்குழுவும் வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போது காணாமல் போனோரது உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் சாட்சியமளிக்க முன்வந்திருந்தபோதிலும், சில நூற்றுக்கணக்கானவர்களிடம் மாத்திரமே ஆணைக்குழு வாக்குமூலங்களை பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழு இந்தப் பரிந்துரையினை செய்திருந்த போதிலும், தற்போதுதான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் படையினர் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதற்கிணங்க இராணுவ பிரிகேடியர் தலைமையிலான இராணுவக்குழுவொன்று விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில் படையினர் எத்தகைய மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லையென்றும் காணாமல் போனோர் என்று நாட்டில் எவரும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையினை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் நாட்டில் காணாமல்போனோர் என்று எவரும் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விசாரணை அறிக்கை காணாமல்போனோரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. காணாமல்போன தமது உறவுகள் எங்காவது உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை உறவினர்கள் தேடிவருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டமை அவர்களது நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் விதமாகவே அமைந்திருந்தது.
இந்த அறிக்கைகளின் பின் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வு காணப்படவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை காணாமல் போனோரது உறவினர்களை சந்தித்து அவர்களது உள்ளக் குமுறல்கள் குறித்து அறிந்து கொண்டார். அவரைச் சந்தித்த காணாமல்போனரது உறவினர்கள் கதறி அழுது தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு பல இடங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவரது வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னரே காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்குமாறு கூறியது. இதற்கிணங்க 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர். இதேபோல் இராணுவத்தில் இருந்தபோது காணாமல்போனோரது முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த ஆணைக்குழுவே தற்போது தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்றும், நேற்று முன்தினமும் இடம்பெற்ற விசாரணைகளின் போது காணாமல்போனோரது உறவினர்கள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்றவர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்களுமே அதிகளவில் காணாமல் போயுள்ளனர் என்று இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
சரணடைந்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் புலிகளாக இருந்தால் கூட அவர்கள் காணாமல்போனமைக்கு இராணுவமே பொறுப்புக் கூறவேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியிலேயே இவர்கள் காணாமல்போயுள்ளனர். காணாமல்போன எமது உறவுகள் இன்னமும் உயிருடனேயே இருக்கவேண்டும். எனவே அவர்களை மீட்டுத்தாருங்கள் என்று இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த மக்கள் அழுது புலம்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க காணாமல்போனோரது உறவினர்கள் முண்டியடித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் தமது காணாமல்போன உறவுகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு மக்கள் அலைமோதிவருகின்றனர். நேற்று முன்தினம் கிளிநொச்சியில் மூன்று கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த 35 பேர் மட்டுமே சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 75 பேர் வரையில் சாட்சியமளிக்க வந்திருந்தனர். ஆனாலும், அவர்களை சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.
தமது காணாமல்போன உறவுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து தமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இந்த உறவுகள் முயல்கின்றன. நேற்று இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணையின்போது சாட்சியமளிக்க வந்த மக்கள் இந்த ஆணைக்குழுவானது வெறும் விசாரணை செய்யும் குழுவாக இல்லாமல் எமது உறவுகளை மீட்டுத்தரும் குழுவாக செயற்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது காணாமல்போனோர் தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தவேண்டும். யாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டாரோ அல்லது யாரிடம் குறித்த நபர் சரணடைந்தாரோ அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான அதிகாரங்கள் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இடம்பெற்றபோது அந்த ஆணைக்குழு மீதோ அல்லது ஆணைக்குழுவின் விசாரணைகள் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது உள்ளக்குமுறல்களை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். இதற்கிணங்க, இந்த ஆணைக்குழுவும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க பரிந்துரைகளை செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் கூட இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது தனது கடமையினை சரிவர செய்ய வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments
Post a Comment