அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை' என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் வந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
இறுதிக் கட்டப் போரில் நிகழ்த் தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்ற ஆதாரங்கள் இந்தச் சந்திப்பில் ஆயர்களால் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்டன.
அரசின் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி வரும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இவர்கள் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாகப் பொய்யான தகவல்களை வழங்கியுள்னர்.
இதனாலேயே ஸ்ரீபன் ராப் இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்று தெரிவித்துள்ளார். எனவே பொய்யான தகவல்களை வழங்கிய இரு ஆயர்களையும் கைது செய்ய வேண்டும்' என்று இராவண பலய என்ற சிங்கள பெளத்த கடும் போக்கு அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது.
இது தொடர்பில் மன்னார் ஆயர் தெரிவிக்கையில், நாங்கள் கொடுத்த ஆதாரங்களை முடிந்தால் பொய்யென்று இவர்கள் நிரூபிக்கட்டும். அவ்வாறு செய்த பின்னரே எங்களைக் கைது செய்வது தொடர்பில் கதைக்க முடியும்.
எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதிக் கட்டப் போரில் சிக்குண்ட மக்கள், பங்குத் தந்தையர்கள் எல்லோருடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எங்களுக்குப் பல தகவல்களை வழங்கியுள்ளனர்.
அதனையே நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அந்த மக்களிடம் வெளியாள்கள் சென்று தகவல் பெற முடியாது. அவர்கள் எம்மை நம்பியே வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதிப் போரில் நடந்த உண்மைகளைப் பலர் இரகசியமாக ஐ.நாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாங்கள் பகிரங்கமாகச் சொன்னதால் எங்களை எதிர்க்கின்றனர் என்றார் அவர்.
No comments
Post a Comment