மத்திய ஆபிரிக்க குடியரசில் தனது குடும்ப அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாக நபரொருவர் பிறிதொருவரைத் தாக்கி அவரது மாமிசத்தை உண்டமை தொடர்பாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
'விசர் நாய்' என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் மேற்படி நபர் 'பிபிசி' ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத ரீதியான பிரிவினைவாதிகளால் தனது கர்ப்பிணி மனைவியும், மைத்துனியும், அவரது குழந்தையும் கொல்லப்பட்டதால் சினமடைந்தே தான் வேற்று மதத்தை சேர்ந்த ஒருவரை இவ்வாறு படுகொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மதப்பிரிவினை வாதத்தால் தனது குடும்பத்தினரை இழந்து சினத்திலிருந்த போது, மினிபஸ் ஒன்றில் அமர்ந்திருந்த நபரொருவரை தான் இலக்கு வைக்க தீர்மானித்ததாக 'விசர் நாய்' என்ற மேற்படி நபர் தெரிவித்தார்.
தன்னை சுமார் 20 இளைஞர்கள் வரை பின்பற்றுவதாகவும் தானும் தனது குழுவினரும் குறிப்பிட்ட பஸ்ஸை நிறுத்தி சாரதியை அச்சுறுத்தி அந்நபரை இழுத்துச் சென்று அடித்து கத்தியால் குத்தி அவருக்கு தீ வைத்த பின் அந்நபரது மாமிசத்தை உண்டதாக கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டில் இடம்பெற்ற மத பிரிவினைவாத வன்முறைகளில் குறைந்தது 1000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
No comments
Post a Comment