திருக்கேதீஸ்வரம் சமய குரவர் இருவரால் தேவாரம் பாடப்பட்டு இந்துக்களால் பழமை வாய்ந்த புனித தலமாக மதிக்கப்படும் இடமாகும். இத்தல வளாகத்தில் மனிதப் புதைகுழி காணப்படுவது உலக வாழ் இந்துக்களின் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலுக்கு ஒப்பானது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்புத் துறை தலைவருமான சி. பாஸ்க்கரா விசனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இனவாதம் தாண்டவம் ஆடுவது உலகறிந்த விடயமாகும். தற்போது மதவாதம் தலைவிரித்தாடுவதும் உலகம் அறிந்த விடயமேயாகும். குறுகிய காலத்தில் பல இந்து, கிறிஸ்தவ, பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதும், திருடப்படுவதும் யாவரும் அறிந்ததேயாகும். இதை வன்மையாக மனச்சாட்சியுள்ள மனிதர்களும் உலக நாடுகளும் கண்டித்தமை நாமறிந்த விடயமாகும்.
இவ்வேளையில் எல்லாற்றையும் விஞ்சுவதாக அமைந்துள்ளது இனவெறியாட்டமே. அதைவிட மேலாக மதவெறி நடவடிக்கையின், உச்சநிலையே திருக்கேதீஸ்வர வளாகத்தில் காணப்படும் மனிதப்புதைகுழியாகும். இப் பாதகச் செயலை எவர்? எப்போ செய்திருப்பினும் மன்னிக்க முடியாத குற்றமும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 1982ஆம் ஆண்டு தயாரித்து பாவனைக்கு விடப்பட்ட 25 சத நாணயக்குற்றி முக்கிய ஒரே தடயமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்து சூழ்நிலையை நாம் கவனமாக நோக்குதல் வேண்டுமேயாகும்.
கோவில் வளாகம் முழுக்க முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டிலும் இராணுவத்தின் கண்காணிப்புக்கும் உட்பட்ட பிரதேசமாக கடந்த 82ஆம் ஆண்டுக்குப் பின் இருந்தமை தரவுகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
1982ஆம் ஆண்டு முதல் 90 முதல் பூஜை வழிபாடுகளுடன் கோவில் இருந்தமையும் 90 முதல் 2002ஆம் ஆண்டு வரை இராணுவ கட்டுப்பாட்டுடனும் பூசை வழிபாடுகள் இன்றியிருந்தமையும் காணக்கூடியதாக உள்ளவேளை 2002ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலம் முதல் இராணுவ அனுமதியுடன் 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்துடன் பூஜை வழிபாடு இன்றுவரை நடைபெறுகின்றதையும் காணக்கூடியதாக உள்ளது.
இதனை கவனித்துப் பார்க்கும்போது இராணுவம் கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய கடமைப்பாட்டை தட்டிக் கழிக்க முடியாதது புலனாகிறது.
இதனை கருத்திற்கொண்டு கிருஷாந்தி கொலையை அரசு மறுத்து உச்ச ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின் கொலை செய்யப்பட்டவர்களுக்கு சட்டத்தின் உச்ச தண்டனையான மரண தண்டனை வழங்க்கப்பட்டது யாமறிந்ததே. மேலும், மரண தண்டனை கைதி தனது இறுதி விருப்பமாக கிருஷாந்தி கொலை விபரத்தை தெரிவிக்க முன்வந்த போது மரண தண்டனைக் கைதி யின் விபரம் தெரியாமல் போனதும் நாமறிந்த உண்மையாகும்.
அரசு மேலும் காலத்தைத் தாழ்த்தாமல் கிருஷாந்தி வழக்குப்போல் நடைபெற இடமளிக்காமல் தக்க பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி கொலைப்பாதகர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் தொடர்சிக்கலில் இருந்து அரசு ஓரளவு மீள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். இல்லையேல் இலங்கைக்கான இன்னல் நிரந்தரமாக மாறிவிடும்
No comments
Post a Comment