பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவர் அப்துல் காதர் முல்லாஹிற்கு 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து சுதந்திரமடைவதற்கான போர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் வியாழக்கிழமை இரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் குற்றவியல் தீர்ப்பாயத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதலாவது நபராக முல்லாஹ் விளங்குகிறார்.
1971 ஆம் ஆண்டு போரின் போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 2010 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஸ்தாபிக்கப்பட்டது.
ஜமாத் – ஈ – இஸ்லாமிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முல்லாஹ் இந்த வருட ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, டாக்காவின் புறநகரப் பகுதியான மிர்பூரில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் நிராயுதபாணிகளான பொது மக்களும், பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவளித்த புத்திஜீவிகளும் உள்ளடங்குகின்றனர்.
முல்லாஹ் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு (65 வயது) டாக்கா மத்திய சிறைச்சாலையில் வியாழக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 10.01 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவருடன் இறுதி சந்திப்பை மேற்கொள்ள அவரது குடும்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது முல்லாஹ் மிகவும் அமைதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தான் பங்களாதேஷிலுள்ள இஸ்லாமிய இயக்கத்திற்காக உயிரை தியாகம் செய்வதையிட்டு பெருமையடைவதாக முல்லாஹ் தெரிவித்ததாக அவரது மகன் ஹஸன் ஜமீல் கூறினார்.
முல்லாஹ்வின் மரணதண்டனை நிறைவேற்றத்தையடுத்து பதற்ற நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாக்காவில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை வன்முறை மோதல்களில் ஈடுபட்டனர்.
அதேசமயம் ஜமாத் – ஈ – இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 3பேர் பலியானார்கள்.
No comments
Post a Comment