Latest News

December 27, 2013

அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கிய ஆய்வுக் கப்பல்
by admin - 0


செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில்
சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்
ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மேனியாவின் தலைநகர் ஹோபார்ட்டிலிருந்து சுமார் 1,500 கடல் மைல்கள் தெற்கேயிருந்து கடுமையான காற்றால் கொண்டு வரப்பட்ட தடிமனான ஐஸ் கட்டிகளால், ரஷ்ய ஆய்வுக் கப்பலான, 'அக்கெடெமிக் ஷோக்கால்ஸ்க்கி' , சிக்குண்டிருக்கிறது. ஆனாலும் , அந்தக் கப்பலில் போதிய
உணவு இருப்பதால், குழுவினருக்கு எந்தவித உடனடி ஆபத்தும் இல்லை என்று குழுவின் தலைவர்கள் க்ரிஸ் டர்னி மற்றும் க்ரிஸ் போக்வில் ஆகியோர் கூறினார்கள். பனியால் சிக்குண்டிருக்கும் நிலையிலும்,
கப்பலில் உள்ள ஆய்வுக்குழுவினர், கடல் வெப்பநிலையைப் பதிவு செய்வது, கடல் நீரில் உப்புத்தன்மையை அளப்பது போன்ற ஆய்வுகளைத்
தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வழி ஆய்வாளர் டக்ளஸ் மாசன் பயணித்த அதே வழியில் பயணித்து, இந்த நூறாண்டுகளில் சுற்றுச்சூழலின் பல அம்சங்கள் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றன என்பதை ஆராய்வதை தங்களின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.
« PREV
NEXT »

No comments