பதுளை - ஹாலிஎல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மன் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 150 வருட கால பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காளியம்மன், அப்பகுதி மக்களின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனமுறுகலை ஏற்ப டுத்தும்
வகையிலேயே இச்சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேற்படி சிலை உடைக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண ஆளுநர் சீ.நந்தமெத்தியூ, மாகாண முதலமைச்சர் சஷிந்திரராஜபக் ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் மாகாண பிரதி பொலிஸ் அதிபருடன் தொடர்பு கொண்டு சிலை உடைப்பில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாண அமைச்சரின் பணிப்பின் பேரில் இ.தொ.கா. ஆலோசகர் டி.வி.சென்னன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடைக்கப்பட்ட அம்மன் சிலையினை பார்வையிட்டனர்.
இதேவேளை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான வடிவேல் சுரேஷ் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
உடைத்து சேதமாக்கப்பட்ட சிலைக்கு பதிலாக பிறிதொரு சிலையினைப் பெற்றுக் கொடுக்கவும் அவ்ஆலயத்தையே புனர்நிர்மாணம் செய்யவும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அவரது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிலை உடைப்பு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்களை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
No comments
Post a Comment