உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள மனித நேயம் மற்றும் ஜனநாயகத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் செய்திகளை அனுப்பிவருவதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும் தயாராகிவருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல முக்கிய உலக தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்வதற்கு தயாராகியுள்ளதுடன் மண்டேலாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமான தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் உலகின் மாபெரும் தலைவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுச் செய்தியறிந்து உலகெங்கும் பல கோடிக் கணக்கானோர் துயரில் ஆழ்ந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ் பேர்க் நகரில் கூடிவரும் இலட்சக்கணக்கான மக்கள் அன்னாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.
தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக பல வருடங்களாக போராடி வந்த நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதிலேயே கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். நிறவெறி அடக்கு முறைகளுக்கு எதிராக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த மண்டேலா மக்களை மீட்டெடுத்த மீட்பராக திகழ்ந்தார். 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி குனு என்ற கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா நிறவெறி அடக்கு முறைக்கு எதிராக போராடி 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போன்று இவ்வளவு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர்கள் வேறு எவரும் இல்லை.
27 ஆண்டுகள் சிறையில் கொடுமைகளை அனுபவித்துவந்த மண்டேலாவுக்கு மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில் 1988-ஆம் ஆண்டு கடுமையான நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்ற நிலையில் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
தேசத்துரோக குற்றச்சாட்டில் 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1990 ஆண்டு மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றபோது அவருக்கு 71 வயது. மண்டேலா அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜனாதிபதியானதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. மொழிப் பிரச்சினைகளின் காரணமாக சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு இது சிறந்த உதாரண செயற்பாடாகும். தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மண்டேலா 1999 ஆண்டு பதவியை விட்டு விலகியதுடன் இரண்டாவது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் உலக அமைப்புக்களில் இணைந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். உலக மக்களின் மாபெரும் தலைவராகவும் மனித நேயத்தின் உற்ற நண்பனாகவும் மண்டேலா விளங்கினார்.
தென்னாபிரிக்காவில் வன்முறை இடம்பெற்ற காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனது விடுதலையின் பின்னர் மண்டேலா முயற்சிகளை முன்னெடுத்தார். அதன் ஒரு கட்டமாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்து நல்லிணக்கத்துக்கு வலிகோலினார்.
இந்த நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாக பழிவாங்கலை விடுத்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமை உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் வலுவான சிறந்த ஆணைக்குழுவென இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு பெயர் பெற்றுள்ளது.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1993 ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1990ஆம் ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் இந்த உன்னத மனிதருக்கு வழங்கப்பட்டது.
மண்டேலாவின் மறைவுக்கு அனுதாப செய்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்னாபிரிக்க சுதந்திரப்போராட்டத்திற்கான அவரது துணிச்சல் மிகுந்த தலைமைத்துவம் முன்னுதாரணமிக்கதும் உலகெங்கிலுமுள்ள சமாதானத்தை விரும்பும் மக்களை பெரிதும் ஈர்த்ததுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காலஞ்சென்ற மண்டேலா சமாதானத்தின் அடையாளமாகவும் சுதந்திரத்தின் கலங்கரைவிளக்கமாகவும் திகழ்ந்தார். அவர் ஏற்படுத்திய சமாதானமும் முன்னுதாரணமாகக் கொண்ட வாழ்க்கைத் தத்துவமும் சமாதானத்திற்காக நீண்டகாலமாக முயற்சித்துவரும் இலங்கையிலுள்ள எங்களுக்கும் மிகப்பெரும் முன்னுதாரணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் தத்துவமும் எனக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்ற வகையில் தலைவர் மண்டேலாவின் இழப்பை தனிப்பட்ட முறையில் நான் ஒரு பேரிழப்பாகக் கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தென்னாபிரிக்க முதல் கறுப்பு இன ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராக போராடி அதில் வெற்றிகண்டவருமான உலகின் உன்னத தலைவரான மண்டேலா மறைந்துவிட்ட நிலையில் உலகில் இன்னும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டிய பல நாடுகள் உள்ளன. உலகின் பல இடங்களிலும் இன்னும் அடக்கு முறைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கு நல்லிணக்க வேலைத்திட்டங்களும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மண்டேலா மறைந்துவிட்டாலும் அவர் தீர்ப்பதற்காக போராடிய பிரச்சினைகள் உலகில் இன்னும் தொடர்கின்றன.
30 வருடகால மோதல்நிலை முடிவுக்கு வந்துள்ள இலங்கையில் மக்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையும் நல்லிணக்கமும் விரைவாக ஏற்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்கா தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக அண்மையில் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் சுமா தெரிவித்திருந்ததுடன் அதற்கு இலங்கை அரசாங்கமும் சாதகமான பதிலை வெளியிட்டிருந்தது.
இதனிடையே நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, 'அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார். 11 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த சந்திரிகா குமாரதுங்கவின் கூற்றை இலகுவாக எடுக்க முடியாது.
எனவே இலங்கையில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நெல்சன் மண்டேலாவின் அனுபவ பாடங்களை கற்றுக்கொள்வது பயன்மிக்கதாகவே அமையும். அவரின் பாதையில் சென்று பொறுமை வழியில் நல்லிணக்கத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வையும் அடைவதே சாலச் சிறந்ததாக அமையும் என்பதனை உலகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றோம்.
No comments
Post a Comment