Latest News

December 17, 2013

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: பாஜகவுடனும் கூட்டணி இல்லை- கருணாநிதி
by admin - 0


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என திமுகத் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு மே மாதம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இந்நிலையில், நேற்று தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,026 பேர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர், ‘நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது' என்றார். இதைத்தொடர்ந்து பொதுக் குழுவில் பேசிய பெரும்பாலானவர்கள், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில், ‘நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதி பங்கீடு பற்றி கலந்து பேசிடவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு ஒன்றை தி.மு.க. சார்பில் அமைத்து அறிவித்திடவும், கூட்டணியை உருவாக்கிடவும் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இப்பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது' எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. தீர்மானத்திற்குப் பின்னர், தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:- காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை. பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு. கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும். நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர் களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள். நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார். முன்னதாக, பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலின் போது மரணமடைந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன், பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமயநல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


« PREV
NEXT »

No comments