Latest News

November 23, 2013

பேரறிவாளன் நிரபராதி என்பதை நிரூபிக்கும் ஆவணப்படம் இன்று வெளியிடப்பட்டது
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நிரபராதி என்பதை நிரூபிக்கும் ஆவணப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கும் ராஜீவகாந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரை தலைவராக கொண்டு இயங்கும் மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், பேரறிவாளன் நிரபராதி என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
“உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம் 55 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இவ் ஆவணப்படம் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முருகையன் கருத்து வெளியிடுகையில்,
மரண தண்டனை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கும் இந்த கால கட்டத்தில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு முன் உதாரணமாக எடுத்து அது தொடர்பாக உண்மை நிலையை அறிய ஆதாரங்களுடன் ஆவணப்படம் எடுத்துள்ளோம்.
பேரறிவாளனை கைது செய்த போலீஸ் அதிகாரி அப்போது என்ன சொன்னார்? இப்போது என்ன சொல்கிறார், எதனால் பேரறிவாளன் சிக்கினார்? போன்ற பல்வேறு கோணங்கள் பற்றி பொலிஸ் அதிகாரி விளக்குகிறார்.
அப்போது வெளிவராத பல உண்மைகள் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. பேரறிவாளன் நிரபராதி என்பதற்கான அழுத்தமான உண்மைகள் இதில் இடம் பெறுகிறது.
இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி கே.பி.தாமஸ் இப்போது என்ன சொல்கிறார் என்ற விளக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
பேரறிவாளன் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர் என்பதால் அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் சென்று பேரறிவாளன் எப்படிப்பட்டவர், அவரது நடத்தை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றையும் விரிவாக பதிவு செய்ய முடிந்தது.
பேரறிவாளனின் அப்பா குயில்தாசன், தாயார் அற்புதம் அம்மாள், அக்காள் அன்பு, தங்கை அருள் ஆகியோரிடமும் பேட்டி எடுக்கப்பட்டு முற்றிலும் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பேரறிவாளன் நிரபராதி என்பது வலியுறுத்தப்படுகிறது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். எனவே இவர்களது கருத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.
இயக்குனர் பாரதிராஜா வெளியிட அதை வெற்றி மாறன், ஒளிவண்ணன் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் சீமான், நல்லக்கண்ணு, தனியரசு உள்பட பலரும் பங்கு பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆவணப்பட வெளியீடு தியாகராயநகர் சர்.பி.டி.தியாகராயஜர் அரங்கில் இன்று மாலை இடம்பெற்றது.
« PREV
NEXT »

No comments