Latest News

November 02, 2013

தமிழன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே கொண்டாடுவது வெட்கம்
by admin - 0

அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதனைக் குடிக்கிற மூடர்கள் இருக்கிறார்கள்.

அது போலவே ஆதியில் இல்லாது பாதியில் வந்த தீபாவளிப் பண்டிகையை தமிழர்கள் அது தமிழ்ப் பண்டிகை என நினைத்துக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்?

* வடநாட்டு குஜராத்திகள், மார்வாரிகள் தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள் எனக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தீபாவளி புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள்.

* வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்கு உரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள்

* தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும்.

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை தூக்கிச் சென்று சிறை வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை போரில் கொன்றுவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, வீடுகளில் விளக்கேற்றிக் கொண்டாடினர்.

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கிக் கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொள்கிறார்.

ஆனால் நரகாசுரனை கொல்வது விஷ்ணுவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே விஷ்ணு பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச் சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறு அவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவது போல் பாசாங்கு செய்கிறார். அதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விஷ்ணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கிறான் நரகாசுரன்.

காத்தல் கடவுள் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரமும் அசுரர்களைக் கொல்வதற்காகவே என புராணங்கள் புகல்கின்றன.

1) மச்ச (மீன) அவதாரதம்

குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால்தான் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான். வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

2) கூர்ம (ஆமை) அவதாரம்

ஒரு நாள் துர்வாசர் மகாவிஷ்ணு கொடுத்த மாலையைத் தேவேந்திரனுக்குக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் பிடரி மீது வைக்க, அது நழுவிக் கீழே விழுந்தது. அந்தத் தெய்வீக மலர் மாலையை யானை தன் காலால் மிதித்தது. அதனைக் கண்ட முனிவர் கடும் கோபத்துடன், ” தேவேந்திரா, மகாவிஷ்ணுவின் அருளினால்தான் நீ இந்தப் பதவியும், சிறப்பும் பெற்றிருக்கிறாய். அதை மறந்து, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையை இழிவு படுத்தி விட்டாய். அதனால், நீ இலட்சுமி கடாட்சத்தையும், தேவே பதவியையும் இழப்பாய்” என்று சாபம் இட்டார்.

துர்வாச முனிவர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும், தேவேந்திரனால் சாபம் உண்டானது. தேவர்கள் அனைவரும் தமது பலம் முழுவதையும் இழந்தார்கள்.

அப்போது, அசுரர்களின் பலம் அதிகமாகியது. இதனால் தேவலோகத்திலிருந்து தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும் விமோசனம் வேண்டிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணு, “தேவேந்திரா, அசுரர்களுடன் போரிட்டு அழிக்கும் சக்தி உங்களிடம் இல்லை. அதனால், நீங்கள் அசுரர்களுடன் சமாதானமாகி, திருப்பாற்கடலைக் கடைந்து, தேவ அமிர்தம் எடுத்து உண்டால் பலம் உண்டாகும். சாகா வரம் கிடைக்கும். பிறகு நீங்கள் இழந்ததைப் பெறலாம்” என்று யோசனை கூறினார்.

அமிர்தம் கடைவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். தேவர்கள் பாம்பின் தலையைப் பிடிக்க, அசுரர்கள் “நாங்கள் கேவலமானவர்கள் இல்லை. பாம்பின் வாலை நாங்கள் பிடிக்க மாட்டோம். ” என்று வீரம் பேசினார்கள்.

அவர்கள் விருப்பப்படி, தேவர்கள் பாம்பின் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது.

அச் சமயத்தில் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்துக் கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி ஒரு தங்கக் கலசத்தில் தேவ அமிர்தத்தை ஏந்தியவாறு தோன்றினார். அசுரர்கள் வேகமாகச் சென்று, தேவர்களை முந்திக்கொண்டு அக்கலசத்தைப் பறித்துக் கொண்டார்கள்.

அப்போது, மகாவிஷ்ணு மோகினி என்ற அழகான பெண் உருவம் எடுத்து, அசுரர்களை மயக்கி, அமிர்தத்தைத் தேவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து அசுரர்களை ஏமாற்றினார்.

அமிர்த பானத்தை அருந்திய தேவர்கள் புதிய பலமும் சாகாவரமும் பெற்று, அசுரர்களை வென்று அவர்களைப் பாதாள லோகத்துக்கு ஓடும்படி விரட்டிவிட்டு, மீண்டும் தேவ லோகத்தைக் கைப்பற்றினார்கள்.

வராக (பன்றி) அவதாரம்

ஒரு சமயம், மகரிஷிகள் (முனிவர்கள் ) நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் செல்லும்போது, ஏழாவது நுழைவாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள். எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபமடைந்து, “நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

மகாவிஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், ” இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானதுதான். இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின் நம் அருளினால் நம்மையே அடைவார்கள் ” என்று கூறினார்.

கசிப முனிவருக்கும் அதிதிக்கும் மூன்று பிள்ளைகள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு. அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமிருந்து ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான். இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைப் பிடித்துக் கொன்று வந்தான்.

பூலோகம் நீர்ப் பிரளயத்தில் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது. இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.

அப்போது நாரதர் அங்கே தோன்றி, ” இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார் ” என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.

வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின்மீது விழுந்து மடிந்தான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.

நரசிம்ம அவதாரம்

தன் தம்பி இரண்யாட்சன் வராகமூர்த்தியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த இரண்யகசிபு கொதித்தெழுந்தான். தேவர்களுக்கு மகாவிஷ்ணு துணையாக இருப்பதால், அவரைக் கொன்று விட்டால், தேவர்களை இலகுவாக வெல்ல முடியும் என்று தீர்மானித்தான்.

தேவர்களுக்கும், விஷ்ணுவுக்கும் பலத்தை அளிப்பது பூலோகத்தில் நடத்தப்படும் யாகங்கள்தான் என்பதை அறிந்த இரண்யகசிபு, எங்கெங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றனவோ, அந்த இடங்களை எல்லாம் நாசமாக்கினான். முனிவர்களை அடித்து வதைத்தான். இதனால், தேவர்கள் அனைவரும் அவதியுற்று, பூலோகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.

இரண்யகசிபு பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார்.

இரண்யன் ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று உலோகங்களையும் ஆட்சி செய்து வந்தான்.

தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தைத் தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகு விரைவில் இரண்யனைக் கொன்று அவர்களைக் காப்பாற்றுவதாக அருளினார்.

தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான்.

இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.

அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான்.

“தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்” என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், ” அந்த ஹரி எங்கே இருக்கிறான் ? ” என்று கேட்டான்.

அதற்கு பிரகலாதன் “எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் ” என்று ஒரு தூணைக் காட்டினான்.

இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும்கொண்ட நரசிம்ம அவதாரத்தில் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.

அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி மாலையாக அணிந்து கொண்டார். இரண்யன் இறந்துபட்டான்.

வாமன அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான். மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.

அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன்மீதேறித் தேவலோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகமான அமராவதியைக் கைப்பற்றினான். மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.

மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று உலோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.

இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்றுக் கணவர் காசிபரிடம் முறையிட, அவர் மகாவிஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.

மகாவிஷ்ணு காட்சியளித்து, ” தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான். அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்” என்று அருளினார். அதன்படி மகாவிஷ்ணு அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், வாமனமூர்த்தி தனது குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாகசாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான். கழுவிய நீரைத் தன் தலைமேல் தெளித்துக்கொண்டான்.

பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.

“மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு” என்று கேட்டார்.

அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், ” மூன்று உலோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் ” என்று கூறினான்.

அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, ” குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான்” என்று கூற, மகாபலி பதிலாக “என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் ” என்று கூறிவிட்டுத் தன் மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டியிலிருந்து தண்ணீரை ஊற்றித் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.

வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், “ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று கேட்டான். மகாபலி சற்றும் தயங்காமல், ” மகாவிஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள்” என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றான். மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும் அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.

இராம அவதாரம்

விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.

இராவணனும் கடும் தவம் புரிந்தான். பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார். இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேரக் கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.

இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோக அரசன் தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.

பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன் இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால் அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.

இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு ‘மனிதனால்’ மரணம் நேரக் கூடாது எனக் கேட்கவில்லை. இதனைக் கூறிய மகாவிஷ்ணு, தான் இராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.

தசரதனுக்கும் கோசலைக்கும் இராமன் பிள்ளையாகப் பிறக்கிறான். இராமன் சீதையை மணக்கிறான். இராமனுக்கு முடிசூட்ட செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை தசரதன் செய்கிறான். ஆனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினைக் கேட்டு தசரதரிடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.

அதன் படியே இராமன், சீதை, இலட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.

பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.

தனது தங்கையின் மூக்கை அறுத்த இராமனை பழி வாங்கும் நோக்குடன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே இராவணன் சிறை வைத்தான்.

வானரங்களின் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் போர் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபீடணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் அல்லது இயக்கர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும் தேவர்களை மீட்கக் கடவுள் மீன், ஆமை, பன்றி போன்ற அவதாரம் எடுத்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரைக் குறிக்கும் குறியீடுகள் ஆகும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் அல்லது அரக்கர்கள் அல்லது இயக்கர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமிபாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், உடன்பிறப்பைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய Discovery of India என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும் அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். (ஆரண்ய காண்டம், 10 ஆவது சருக்கம்)

“தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாம் எழுதிய ‘தமிழர் சமயம்‘ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும் குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும் தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் – இராவணன் முதலானோர் நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”. (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60)”மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்” என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

“தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (இராமாயணச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் பக்கம் 587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழர்கள் செக்குமாடுகள் போல் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்!

என்று மகாகவி பாரதியார் மனம் வெந்து சொன்னது இற்றைவரை சரியாகவே இருக்கிறது.

தமிழர்களே சிந்திப்பீர்! ஆரியம் எம்மைத் தாழ்த்தும் தீபாவளியை கொண்டாடாதீர்கள். மீறிக் கொண்டாடுவது எமது தன்மானத்துக்கு இழுக்கு!
« PREV
NEXT »

No comments