Latest News

November 07, 2013

மன்மோகன் இலங்கை செல்ல முடிவு ?தமிழகத்தை சமாளிக்க யாழ்ப்பாணம் பயணம் ?
by admin - 0

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதை எதிர்க்கும் தமிழக கட்சிகளை சமாளிக்க, "யாழ்பாணத்திற்கும் சென்று, அங்குள்ள தமிழர்களை பிரதமர் சந்திக்க வேண்டும்' என, பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் யோசனை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில், பிரதமர் இலங்கைக்கு பயணிப்பாரா, இல்லையா என்ற முடிவு, இன்று அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்ப்பு:
இலங்கை தலைநகர், கொழும்பில், வரும் 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில், இந்தியாவின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க, தமிழக கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக, "இலங்கையில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக சட்டசபையில் ஏகமனதாக, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து, "தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்படும்' என, பிரதமர் உறுதி அளித்திருந்தார்.

குழப்பம்:
இந்த விவகாரத்தில், தமிழக கட்சிகள் ஒருமித்த உணர்வோடு பேசுவதால், என்ன முடிவு எடுப்பது என்பதில், மத்திய அரசுக்கு குழப்பம் 

ஏற்பட்டது. காங்கிரசிலும் கூட, இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்பட்டது. மத்திய அமைச்சர்கள் வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர், "பிரதமர் போகக் கூடாது' என, வெளிப்படையாக, கொடி பிடித்தனர். "பிரதமருக்கு பதிலாக, வேறுஒருவரை அனுப்பலாம்' என, சிதம்பரம் தெரிவித்தார். அதே நேரத்தில், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், "இலங்கை தமிழர்களின் நலன் கருதி, பிரதமர் மாநாட்டுக்கு செல்ல வேண்டும்' என, கூறி இருந்தார். இந்த குழப்பங்களால், காங்கிரஸ் கட்சி தலைமை, "இறுதி முடிவு பிரதமருடையதாக இருக்கும்' என, கூறி, கட்சியை சர்ச்சையில் இருந்து பாதுகாக்க முயற்சித்து வருகிறது.

பரிசீலனை : 
இந்த நிலையில், "இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு நலனுக்காக, பிரதமர், கண்டிப்பாக இலங்கை செல்ல வேண்டும்' என்ற கருத்தை, பிரதமரிடம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.அதே நேரத்தில், தமிழக கட்சிகளை சமாளிப்பதற்காக, யாழ்பாணத்தில் தமிழர்களுக்காக இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடவும், தமிழர்களை சந்திக்கவும்பிரதமர் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், வெளியுறவு 

அமைச்சக அதிகாரிகள் பரிசீலனை வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

முடிவு:இந்த பரிசீலனையை கருத்தில் கொண்டு, இன்று நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமரின் இலங்கை பயணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.இது குறித்து, வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ""முடிவு எடுப்பது குறித்து அனைத்து தரப்பு விவாதங்களும் பெறப்பட்டு உள்ளன. மிக விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என, கூறியுள்ளார். 
« PREV
NEXT »

No comments