Latest News

November 22, 2013

தமிழீழ அரசையும் சிங்கள அரசையும் ஒரு நாடாக உருவாக்கியது ஆங்கிலேயர்களேயாகும்.............
by admin - 0

ஜனநாயகமும் ஒற்றுமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜனநாயகமும் ஒற்றுமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. இதில் ஒன்றில்லாமல் ஒன்று உயிர் வாழமுடியாது.
மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் ஒரு சிறந்த அமைப்பே ஜனநாயகமாகும். இதன் உயர் வடிவம்தான் அரசியல் ஆகும். இதுவே மக்களுக்கான வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இது ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களின் ஈடுபாடு, ஆர்வம் போன்றவற்றின் அளவு விகிதத்தாலேயே இதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதன் வெற்றி என்பது மக்களின் ஒற்றுமையான செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே. இது வெறும் பழமொழி அல்ல, இது வெற்றி பெற்ற ஒரு நடைமுறைத் தத்துவமாகும். இதை வெற்றி பெற்ற நாடுகளான ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலும், இது போன்ற வேறு பல நாடுகளிலும் காணலாம். இங்கு மக்கள் நல்வாழ்வுக்கான அரசுகள் உருவாக்கப்பட்டன. இவைகள் சர்வாதிகார முறையில் தான் உருவாக்கப்பட்டன என்ற சர்ச்சை இருந்தாலும் இதற்காக மக்களைத் தயார்படுத்திய வழி ஜனநாயக வழியாகவே இருந்தது.
உண்மையான ஜனநாயக வழியில் தான் மக்கள் பயணிப்பார்கள் என்பதுதான் உலகின் விதியாக உள்ளது. இதை நடைமுறை ரீதியாக எங்கும் காணமுடியும். எந்த நாடாக இருந்தாலும் ஜனநாயகத்திற்கு எதிராக சர்வதிகார நடவடிக்கைகள் நடைபெறும் போது அதே வன்முறை வழிகளில் மக்கள் ஈடுபடுவதும் அதுபோன்ற வழிகாட்டல்களுக்கு பின்னால் மக்கள் செல்வதும் இயல்பாக உள்ளது. இதுவும் ஒரு நடைமுறை விதியாகவே உள்ளது. இந்த விதியிலிருந்து எவரும் விலகியிருக்க முடியாது என்பதே உண்மையாகும். இந்த யதார்த்தங்களை மக்களின் நல்வாழ்வுக்கான அரசுகள் உள்ள நாடுகளில் பார்க்கலாம்.
இன்று உலகில் சர்வாதிகாரத்திற்கு எதிராகவே போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்களின் வாழ்வியலுக்கான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் முன்வைக்கும் போது அதைச் சர்வதிகாரத்தைப் பாவித்து அடக்க அல்லது அழிக்க முயலும் போதே அதே வன்முறை வழிகளை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மையாகும். இதைப் போராட்டங்கள் நடைபெற்ற நாடுகளிலும் இன்று நடைபெறும் நாடுகளிலும் எம்மால் காணமுடியும்.
எமது தமிழீழப் போராட்டமே இதற்கு நல்லதோர் உதாரணமாகும். இன்று எமது பிரச்சினைக்கு காரணமாக உள்ள தமிழீழ அரசையும் சிங்கள அரசையும் ஒரு நாடாக உருவாக்கியது இங்கு வாழ்ந்த தமிழ்மக்களோ சிங்கள மக்களோ அல்ல, அன்னியரான ஆங்கிலேயர்களேயாகும். இதற்கு இவர்கள் கையாண்ட வழி சர்வதிகாரமேயாகும்.
ஆங்கிலேயர் தங்களால் உருவாக்கப்பட்ட இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது முன்பு இருந்தது போல் தமிழர்களின் அரசைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களின் அரசைச் சிங்களவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். அப்படியில்லாது சிங்களவர்களின் கைகளிலேயே முழு நாட்டையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். இதன் விளைவையே நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதைப் பயன்படுத்திய சிங்கள அரசு தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுக்க ஆரம்பித்தது. இங்கு ஆரம்பித்தது தான் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம்.
இது உண்மையில் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே 1919ம் ஆண்டு முதலாவது அரசியல் கட்சி சேர் பொன். அருணாசலம் என்ற தமிழரின் தலைமையில் இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் தமிழ் சிங்கள மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் தொகையில் சிங்களவர்கள் அதிகமாக இருந்ததால் கட்சியிலும் சிங்கள உறுப்பினர்களே அதிகமாக இருந்தார்கள். இங்கு தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சிங்கள அரசியல்வாதிகள் மறுத்ததைத் தொடர்ந்து சேர் பொன். அருணாசலம் அதிலிருந்து விலகி தமிழர் தேசிய மகா சபை என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ் தலைவரான தந்தை செல்வாவின் தலைமையில் 1949ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக நடைபெற்றது. ஜனாநாயக ரீதியான நடாத்தப்பட்ட இப் போராட்டங்கள் அனைத்தையும் சிங்கள அரசு சர்வதிகாரமாக அடக்கியது.
1949ல் இருந்து இறுதி வரை இதையே செய்தது. அடக்கியதோடு இல்லாது 1958ம் ஆண்டில் இருந்து எம் இனத்தை அழிக்கவும் ஆரம்பித்தது. இது முறையே 1958, 1977, 1983 ஆண்டுகளில் பெருமளவில் நடைபெற்றன. இதுமாத்திரமின்றி தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி நிலங்களையும் கபளீகரம் செய்தது.
இதைத் தொடர்ந்துதான் 1976ல் தந்தை செல்வாவின் தலைமையில் தமிழீழ அரசுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவும் ஜனநாயகத்தின் உச்சக் கட்டமான தேர்தலின் மூலமாகவும் சிங்கள அரசுக்கு சொல்லப்பட்டது.
ஆயினும் எந்தத் தீர்வும் தமிழ் மக்களுக்கு கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து தான் சர்வாதிகாரத்திற்கு சர்வாதிகாரமே பதில் என ஆயுத இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  உயிரழிவுகளுக்கு விரும்பாத நிலையிலும் வேறு வழியின்றி தமிழ்மக்கள் ஜனநாயக ரீதியாகவே இவ் வழியில் அணிதிரண்டனர்.
அழிவுகள் கூடியபோதும் மக்கள் ஒன்றுபட்டே நின்றார்கள். இக்காலங்களில் கூட ஜனநாயக ரீதியாக பல தேர்தல்கள் நடாத்தப்பட்டன. இத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ அரசுக்கு ஆதரவாகவே தமிழ்மக்கள் வாக்களித்தார்கள்.
சிங்கள அரசு எண்ணிக்கையில் மிகவும் குறைவான விரல்விட்டு எண்ணக் கூடிய சில தமிழர்களுக்கு பணம், பதவி, சுகபோகம் ஆகியவற்றை பரிசாக அளித்து தமிழர்களின் தலைவர்களாக உலகிற்கு காட்டினார்கள். விலைபோன இத் துரோகிகளை தமிழ்மக்கள் தேர்தல்களில் நிராகரித்தார்கள். இதுவும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வளவு அநியாயங்கள் நடந்தபோதும் உலகநாடுகளும் அதன் அமைப்பான ஐ.நா.சபையும் எதுவும் செய்யாது மௌனமாக வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கொடுமைகள் நடைபெறும் போது மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த இவர்கள், இக் கொடுமைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காகப் போராடிய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளெனத் தடை செய்ததோடு கொடுமைகள் செய்த எதிரிக்கும் உதவி செய்தார்கள். ஜனநாயகம் அழிவதற்கு இவர்களே உண்மையான காரணகார்த்தாவாக இருந்தார்கள்.
உலக அரசுகள் சிங்கள அரசோடு சேர்ந்து எம்மை அழித்தபோதும் முள்ளிவாய்க்காலில் ஐந்து லட்சம் மக்களின் உயிர், வாழ்க்கைக்கான உடைமைகள் அனைத்தையும் அழித்து ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்த போதும் எமது மக்கள் ஜனநாயக வழியில் உறுதியோடு எழுந்து நின்றார்கள்.
வடமாகாண தேர்தலில் சிங்கள அரசு ஆயுதமுனையில் அச்சத்தை ஏற்படுத்திய போதும் உயிராபத்தின் மத்தியிலும் எமது மக்கள் எழுந்து நின்றார்கள். ஜனநாயகத்தை உறுதியோடு காத்து நின்றார்கள். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை உலகத்திற்கு தோலுரித்துக் காட்டினார்கள்.
ஜனநாயகத்தின் தோல்வியில் பிறப்பதுதான் ஆயுதப்போராட்டம் அரச சர்வதிகாரத்தின் குழந்தைதான் ஆயுதப்போராட்டம், இது தான் யதார்த்தமாகும். ஜனநாயகம் உயிர் வாழ்வது என்பது உலகமக்களின் கைகளில் தான் உள்ளது. உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும் அரச சர்வதிகாரம் கோலோச்சும் நாடுகளுக்கு எதிராக உலக மக்கள் ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும். தங்களது நாட்டு அரசுகளையும் உறுதியாக நிற்கச்செய்ய வேண்டும். இதுதான் ஜனநாயகம் உயிர் வாழ்வதற்குரிய வழியாகும்.
இந்த உண்மைகளை உலக மக்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது கேள்விக்குரிய விடயமேயாகும். உண்மைகளை உலக மக்கள் புரிந்து கொள்ள வழி இல்லையா? அல்லது வழி தெரியாதா? அல்லது ஆர்வமில்லையா?
இது எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் இறுதி மூச்சு விடுவதற்கு இதுவே காரணமாகிறது. எத்துணை துன்பங்கள் வந்தாலும் ஜனநாயகம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் என்பதே விதியாகும்.
அடுத்து ஒற்றுமையைப் பார்ப்போம். ஜனநாயகம் இல்லாது விடில் ஒற்றுமை உயிர்வாழ முடியாது. இன்றைய உலகின் நிலை இதுதான். இது இரண்டும் இணைந்திருந்தால் தான் மக்கள் வாழ்வில் வெற்றியும் முன்னேற்றமும் ஏற்படும். உலகில் பல நாடுகள் வளர்ச்சி பெற்றதற்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் இதுவே காரணமாக உள்ளது.
ஒற்றுமை இல்லாதுவிடில் மக்களின் வாழ்வு நிலையில் எந்த ஒரு வெற்றியையும் பெற்றுவிட முடியாது. குறிப்பாக மக்களின் வாழ்வுக்கு தலைமை தாங்குற அரசியலில் கூட எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. அது போன்று, மகிழ்ச்சியான வாழ்வு, தொழில் விஞ்ஞான வளர்ச்சியிலும் வெற்றி காண முடியாது.
மக்கள் வாழ்க்கையில் வீழ்ந்து கிடப்பதைத் தவிர மக்களுக்கு வேறெதுவும் மிஞ்சாது.. துன்பங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக ஒதுங்கியிருக்க முடியாது. துன்பம் இன்பம் இரண்டிலுமே ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஒன்றுபடுவதன் மூலம்தான் துன்பத்தை முழுமையாக அழிக்க முடியும்.
தமிழன் இன்று எப்படி எப்படி எல்லாம் அழிந்து சிதைந்து கொண்டிருக்கிறான் என்பதைப் பார்க்கும் போது கவலை கொள்ளாமல் எவரும் இருக்க முடியாது எதிரிகளையும், துரோகிகளையும் இனம்காண முடியாமல் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிற அவலமும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருப்பது மக்களில் ஒரு சிறு பகுதியினர் தான் என சமாதானம் சொல்லிவிடமுடியாது.
ஏனெனில் இதைத்தான் எதிரி தமிழ்மக்களின் வாழ்வுக்கு எதிராகக் கொடூரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். இத்துரோகிகளுக்கு பணம், பதவி, பட்டங்களை வழங்கி இனத்தை அழிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருக்கிறான். எமது ஒற்றுமையில்லாத செயல்பாடுதான் இக் கயவர்கள் வளர்வதற்கு உதவியாக உள்ளன.
இதுமாத்திரமன்றி உலகிலேயே அழகான தனது தாய்மொழியான தமிழ் மொழியை அழித்து அந்நியமொழியை தனது மொழியாக்கி வாழ்ந்து கொண்டிருகிறான். இந்த அடிமைத்தனம் உலகில் எங்குமே இல்லை. தமிழனிடம் மட்டும்தான் உள்ளது. தனது கடவுளோடு கூட தனது மொழியில் பேசமுடியாத அவலமும் இங்கு தான் உள்ளது. உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகள் அனைத்தும் தமது தாய்மொழியிலையே சாதனைகளையும் புதுமைகளையும் செய்து உயர்ந்து நிக்கின்றன.
இந்த அவலங்கள் அனைத்தும் ஒற்றுமையில்லாத ஒரே காரணத்தினால் தான் நடைபெறுகின்றன என்பதே உண்மையாகும். இது இல்லாததால்தான் பல நாடுகளை அரசாண்ட தமிழன் இன்று சொந்த நாடின்றி அடிமைகளாகவும், அகதிகளாகவும், அண்டிப்பிளைப்பவனாகவும் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தமிழனின் இந்த அவல நிலையைப் பார்த்த தமிழ்ப் புலவனான பாரதியார் 100 வருடங்களுக்கு முன்னரே இந்த அவலங்களையும் கூறி அதைத் தீர்ப்பதற்கான வழிகளைப் பாடல்கள் மூலமாகவும் கூறியிருந்தார்.
சாதிகள் இல்லையடி பாப்பா
உயர் தாழ்ச்சி இகழ் பாவம்
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையையும் வையாதே பாப்பா,
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
இந்தப் பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்,
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, ஒற்றுமை நீங்கில் உண்டாம் தாழ்வே
இவைகள் வெறும் பாடல்கள் அல்ல, வெற்றிபெற்ற நடைமுறைத் தத்துவங்களாகும். தமிழ்க்கவியான பாரதியின் தத்துவங்களை தமிழ்மக்கள்தான் கேட்கவில்லை, உலக மக்கள் அதைச் சரியாகக் கடைப்பிடித்து வாழ்வில் புதுமைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையானவர்கள் எப்போதும் சரியான கருத்தைத்தான் சொல்வார்கள் என்பதற்கு பாரதியே உதாரணமாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், போன்ற அறிஞர்களும் இது போன்ற கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.
உலக மக்கள் எல்லாம் இப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது எமது தமிழ் மக்கள் மட்டும் ஏன் இந்த அவல வாழ்க்கை வாழவேண்டும்? இதிலிருந்து விடுபட முடியாதா? மகிழ்ச்சியான வாழ்வு இவர்களுக்கு கிடைக்காதா? இவை கிடைக்காமைக்குரிய பிரதானமான காரணங்களைப் பார்ப்போம்:
1) மக்கள் அரசியல் பாதையில் ஒற்றுமையில்லாது பிரிந்து நின்றமை.
2) உண்மையான அரசியல் பாதையைத் தெரிவு செய்து அணிசேராமை.
3) சுயநலமாக சுகபோகம் அனுபவிக்கிற தலைவர்களை இனம் காணாது அணிதிரண்டமை.
4) சாதி, மத அரசியலில் இணைந்து பல கூறுகளாக பிரிந்து நின்றமை
5). உண்மையான ஊடகங்களை இனம் காணாது பொய்யான அரசியல்வாதிகளின் ஊடகங்களை ஆதரித்தமை.

இவைகளை உலகமக்கள் சரிவரக் கடைப்பிடித்து வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றார்கள். இப்போதும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனியாவது தமிழினம் உண்மையான அரசியல்வாதிகளை இனம்கண்டு அணி திரண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
ஒற்றுமையே உலகில் வெற்றிகளைக் குவிக்கும். ஜனநாயகமும் ஒற்றுமையும் தமிழ் மக்களின் கவசமாகட்டும்.
மாறன்
sinnaththambypa@gmail.com
« PREV
NEXT »

No comments