Latest News

November 13, 2013

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்; பீதியில் உறைந்துள்ளது யாழ்.குடா
by admin - 0

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சர்வதேச ஊடகவியலாளர்கள்  படையெடுத்துள்ளனர். அவர்களது ஆரம்ப வருகை வடக்கை தளமாகவே அமைந்தது. அதன்படி சர்வதேச ஊடகவியலாளர்கள் யாழ்.குடாவிற்குள் வந்து இறங்கி அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளனர். அத்துடன் அவர்களது தேடல் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அண்டிய பகுதிகளுமேயாகும். இவர்களின் வருகையினை அடுத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டு பொய்த் தோற்றத்தினை காட்டுவதில் இராணுவ தலைமை மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் கடந்த 23 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர்பாதுகாப்பு வலையம் என்ற ரீதியில் வலி.வடக்கு மக்களது நிலங்கள் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அதனை மக்களிடம் கையளிக்கும் சாத்தியக் கூறுகளும் காணப்படாத நிலையில் வலி.வடக்கு மக்கள்  தமது நிலம் தமக்கு வேண்டும் தம்மை மீளக்குடியமர அனுமதிக்க கோரி இன்று முதல் 5 நாட்கள்  தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை மாவட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் ஆரம்பித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டதில் குறித்த சர்வதேச ஊடகவியலாளர்களும் நுழைந்து கொண்டு செய்திகள்  சேகரித்துக் கொண்டனர். எனினும் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்த புலணாய்வாளர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டதுடன்  அவர்களும் தமது வேலைகளை ஆரம்பித்து சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களை பின்தொடர்ந்தனர். எனினும் சுதந்திரமான முறையில் சர்வதேச ஊடகவியலாளர்கள்  தமக்குரிய தரவுகளை பெற்றுச் சென்றனர். இருப்பினும் உள்ளூர் ஊடகவியலாளர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுதந்திரமான முறையில் செய்திகளை திரட்ட முடியவில்லை . ஏனெனில் பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள் தகவலை வழங்குபவரையும் ஊடகவியலாளரையும் அச்சுறுத்தும் வகையில் தொலைபேசியினைப் பாவித்து புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டிருந்தனர். எனினும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் பிரசன்னம் குறைக்கப்பட்டு புலணாய்வாளர்களது பிரசன்னம் அதிகரித்து காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மேலும் ஒரு குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் குறித்த போராட்டத்திற்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


« PREV
NEXT »

No comments