வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பன் பொதுநோக்கு மண்டபத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்த அப்பகுதி மக்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்துத் தங்களது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
கடற்கோள் வடமராட்சி கிழக்குப் பகுதியைத் தாக்கிய போது கரையில் இருந்து ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்துக்குத் தமது கிராமத்துக்குள் கடல் நீர் உள்ளே வந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் மட்டத்தைவிட ஆழமாக மண் அகழப்பட்டுக் கொண்டிருப்பதால் தாங்கள் இப்குதிகளில் வாழ்வதே எதிர்காலத்தில் சாத்தியம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தையும் வெளிப்டுத்தினார்கள்.
விடுதலைப் புலிகள் காலத்திலும் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதுதான் எனினும், அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் ஒன்றை நிறுவி இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படாத அளவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மண்ணையே ஏற்ற அனுமதித்தார்கள் என்றும், கிடைத்த வருவாயில் கணிசமான பகுதியை வடமராட்சி கிழக்கு மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
அத்தோடு, தங்கள் கிராமத்தின் பாதுகாப்புக் கருதி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் மணல் அகழ்வை நிறுத்தக் கோரிய போதெல்லாம் தாங்கள் மணல் ஏற்றும் தரப்பால் அச்சுறுத்தப்பட்டதாகவும், பலதடவை ஆயுதமுனைகளில் கூடத் தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் இவ்வேளையிலாவது மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
இவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாரட்சி கிழக்கில் மட்டுமல்ல வடக்கு மாகாணம் முழுவதுமே எந்தவிதத் தொலைநோக்கும் இல்லாது பணம் சம்பாதிப்பதை அதுவும் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிப்பதை மாத்திரமே குறியாகக்கொண்டு மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மணல் அபிவிருத்திக்குத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேசமயம் அந்த மணல் அகழ்வால் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த இயற்கைச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டு மக்கள் வாழமுடியாத சூழல் உருவாகுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுவும் குறிப்பாக யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர் உவராகும் அபாயத்தில் இருக்கும் நிலையில் கடல் நீரை வலிந்து வரவழைக்கும் விதத்தில் கரையோர மணற்திட்டுகளை அகற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது. மாகாணசபை, வடக்கு மாகாணத்தில் நிகழ்ந்துவரும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மண் அகழ்வை ஒழுங்குபடுத்த விரைவில் ஆவன செய்யும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில் கலந்துகொண்ட மக்களின் ஒருபகுதியினர், மண் அகழப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரதேசங்களுக்கு அமைச்சரை உழவு இயந்திரத்தில் அழைத்துச் சென்று அப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சூழற் பாதிப்புகள் குறித்து விளக்கமாகச் சுட்டிக்காட்டினார்கள்.
இந் நிகழ்ச்சியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ச.சுகிர்தன் சட்டத்தரணி கே.சயந்தன் பருத்தித்துறைப் பிரதேச சபைத் தலைவர் பூ.சஞ்சீவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments
Post a Comment