சிறிலங்காவில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பாதிக்கும் குறைந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களே பங்கேற்றுள்ளனர்.
53 நாடுகள் அங்கம் வகிக்கும் கொமன்வெல்த் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் இன்று காலை ஆரம்பமாகியது.
தொடங்க நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, அவுஸ்ரேலிய பிரதமர் ரொனி அபோட், பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.
இதையடுத்து, உச்சி மாநாட்டுக்கு வந்திருந்த உலகத் தலைவர்கள், பிரித்தானிய இளவரசருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதன் போது, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட 49 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளே கலந்து கொண்டனர்.
இதன் போது, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட 49 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளே கலந்து கொண்டனர்.
53 நாடுகள் அங்கம் வகிக்கும், கொமன்வெல்த் அமைப்பில், கொழும்பு மாநாட்டுக்கு 49 நாடுகளே பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.
இதில் கனடாவின் வெளிவிவகார மற்றும் மனிதஉரிமைகள் விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியொரும் அடங்கியிருந்தனர்.
அதேவேளை, இந்த மாநாட்டில் அதிபர் அல்லது பிரதமர் என 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே, கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, 37 நாடுகளின் அரசுத் தலைவர்கள் கொழுமத்பு மாநாட்டுக்கு வருவதாக உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை செய்திருந்தது.
ஆனால், சைப்ரஸ், வனாட்டு. தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, பஹாமாஸ், சயின்ட் கிட்ஸ், நமீபியா, புரூணை, தன்சானியா, சமோவா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, மால்டா, சொலொமன் தீவுகள், பிரித்தானியா, நௌரு, ருவாண்டா, கானா, தவாவுலா, லெசோதோ, டொங்கோ ஆகிய நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதிநிதிகளே இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் சார்பில், வெளிவிவகார அமைச்சர், அல்லது அமைச்சர்கள், தூதுவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
கடைசியாக 2011ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், 36 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1997இல், ஸ்கொட்லாந்தில் நடந்த மாநாட்டில், 47 நாடுகளினதும், டர்பனில் 1999இல் நடந்த மாநாட்டில் 47 நாடுகளினதும், 2003இல் நைஜீரியாவில் நடந்த மாநாட்டில் 38 நாடுகளினதும், 2005இல் மால்டாவில் நடந்த மாநாட்டில் 38 நாடுகளினதும், 2007இல் உகண்டாவில் நடந்த மாநாட்டில் 36 நாடுகளினதும், 2009இல் ரினிட்டாட்டில் நடந்த மாநாட்டில் 34 நாடுகளினதும் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால், கொழும்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே, இன்று கொமன்வெல்த் மாநாட்டில் தொடங்கவுரை நிகழ்த்திய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மனிதஉரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“கொமன்வெல்த் அமைப்பை அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக தீர்ப்புத் தரும் அமைப்பாகவோ, தண்டனை வழங்கக்கூடிய அமைப்பாகவோ மாற்றி விடக் கூடாது.
கொமன்வெல்த் உறுப்பு நாடுகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டும்.
மேலும், பொருளாதார மேம்பாட்டுக்கு கொமன்வெல்த் நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக நிலவிய தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது அமைதி நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உண்மையான ஒற்றுமையுள்ள அமைப்பாக கொமன்வெல்த் செயற்பட வேண்டும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment