இந்தியாவுக்கு எதிராக அம்பாந்தோட்டையில் சீனாவின் காலனிக்கு அனுமதியளித்த அரசாங்கத்திற்கு எதிராக இன்று ‘சீனா’ பல்டியடித்து மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது என்று அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் தலைவரும் மத்திய மாகாண சபை ஐ. தே. கட்சி உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
பொதுபல சேனாவினர் நோர்வே அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தினதும் கைக்கூலிகளாவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அஸாத் சாலியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அஸாத் சாலி தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொது நலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதன் மூலம் நாட்டுக்குக் கெளரவம் கிடைக்கும் என அரசாங்கம் மார்த்தட்டியது. ஆனால் கெளரவத்திற்கு பதிலாக மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற அழுத்தமே பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தியே ஏற்பட்டுள்ளது.
தலைவர்கள்
53 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றே வெளிநாட்டமைச்சர் உட்பட கசினோ அமைச்சர் என பலர் கூறினர்.
ஆனால் தலைவர்களின் வருகை குறைந்து பல்வேறு நாடுகளின் ஆளுநர்களும் தூதுவர்களும் வெளிநாட்டு அமைச்சர்களுமே கலந்துகொண்டார்கள். எனவே பொய் கூறியமைக்காக வெளிநாட்டு அமைச்சர் உட்பட பொய் கூறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.
முதலீட்டாளர்கள்.
இம் மாநாட்டை நடத்துவதன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு முதலீட்டாளர்கள் வரவும் இல்லை, முதலீடுகள் மேற்கொள்ளப்படவும் இல்லை. வந்தது உலக கசினோ ராஜாவான ஜேம்ஸ் பெக்கர் மட்டுமே ஆகும்.
அரசாங்கம்
கசினோ சூதாட்ட நிலையம் அமைப்பதற்கு அனுமதியும் ஜேம்ஸ் பெக்கருக்கு வழங்கப்படவில்லையென அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் இங்கு வந்த ஜேம்ஸ் பெக்கர் கசினோ
நிலையம் அமைப்பதற்கான வேலைகள் பேரவாவியில் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் பாராளுமன்றத்திலும் தெரிவிக்கவில்லை. மக்களுக்கும் தெரிவிக்கவில்லை இரகசியமாக இதற்கான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியா
இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அம்பாந்தோட் டையில் அனைத்துத் திட்டங்களும் சீனாவிடம் கையளிக்கப்பட்டு அம்பாந்தோட்டையை சீனக் காலனியாக ஜனாதிபதி மாற்றியமைத்தார்.
ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் இங்கு வந்து மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவையென தெரிவித்த பின்னர் சீனாவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. எனவே, பொதுநலவாய மாநாடு கீர்த்திக்கு பதிலாக நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளது.
பொதுபல சேனா
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிகாரம் பகிரப்பட்ட நாட்டில் ஐக்கியமாக வாழ வேண்டுமென்றே நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பொதுபல சேனா அனைத்து இனங்கள் மதங்கள் மத்தியிலும் பிரிவினைகளை ஏற்படுத்தி நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. இவ் அமைப்பு நோர்வேயிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டே பிரிவினையை ஊக்குவிக்கின்றது.
ரணில்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க பொது நலவாய மாநாட்டின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்திருந்தார். இதனை தடுக்கவே அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய சிறிகொத்தா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ரணிலின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. என்றும் அஸாத்சாலி தெரிவித்தார்.
No comments
Post a Comment