Latest News

November 03, 2013

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் -பிரித்தானிய தொழிற்கட்சி
by admin - 0

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய விடயங்களை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிற்கட்சி இருந்து வருவதை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. அதேவேளை இலங்கையின் நல்லிணக்கம்? என்ற தலைப்பிலான பேரவையின் புதிய அறிக்கையின் பிரதியொன்றும் மிலிபேண்டிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, பொருளாதார அடக்குமுறை, மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் தற்பொழுதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மரணங்கள், காணாமல் போனவர்களின் விடயங்கள், காயமடைந்தவர்கள், விதவைகளின் நிலைமைகள் தொடர்பில் மிலிபேண்ட் அதிர்ச்சி வெளிட்டுள்ளார். தனது சகாக்களுடன் இந்த விடயங்கள் குறித்து பகிர்ந்து நம்பிக்கையூட்டும் உரிய முனைப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் கார்டியன் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர் பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
« PREV
NEXT »

No comments