எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளாவிடின் ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்த கருத்தானது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானியப் பிரதமர் விஜயம் செய்த வேளையில் காணாமல் போனவர்களது உறவினர்களும் வலிகாமம் வடக்கில் காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விடயங்கள் குறித்தும் கமரூன் அறிந்திருந்தார்.
இதனைவிட, சுன்னாகத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதிமுகாமுக்கும் சென்று இடம்பெயர்ந்த மக்களின் கஷ்ட துன்பங்களையும் நேரில் பார்வையிட்டிருந்தார். மறுநாள் பொது நலவாய மாநாடு நடைபெற்ற கொழும்பு – பண்டராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செய்தியாளர் மாநாட்டினை நடத்திய பிரித்தானியப் பிரதமர் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவுசெய்யாவிட்டால் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோருவோம் என்று அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துப் பேசிய பிரித்தானியப் பிரதமர் இந்த விடயம் தொடர்பில் நேரடியாகவே கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதியையும் சந்தித்து சுயாதீன விசாரணையை வலியுறுத்திய கமரூன் நாடு திரும்பிய பின்னர் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட உரையாற்றினார். இந்த உரையின்போது இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான செயற்பாடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணைகளில் அதிகமானவை இராணுவத்தின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளமையினால் அவை முற்றுமுழுதாக சுயாதீனத்தன்மை கொண்டவையாக அமையவில்லை. இதனால், மார்ச் மாதத்திற்குள் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும். இல்லையேல், சர்வதேச விசாரணைக்குக் கோரவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பில் வலியுறுத்தினேன். இவ் விவகாரத்தை கையாள்வதற்கு அரசாங்கத்திற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதாகவும், சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார். ஆயினும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சருடன் பங்காளித்துவப் பாங்கில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வெற்றிகரமான – செழுமைமிக்க எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்பலாம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன் எனவும் கமரூன், பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமரின் காலவரையறையும் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையும் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கருத்துத் தெரிவித்த பின்னர் மறுநாள் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, நல்லிணக்கத்திற்கு சர்வதேசம் காலவரையறை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மனித உரிமைகள் விவகாரம் குறித்த விடயத்தில் இலங்கையையும் அரசாங்கத்தையும் மூலை முடுக்கொன்றுக்குத் தள்ளிவிட முயற்சிப்பதை விடுத்து, நீதி நியாயத்தை கடைப்பிடிப்பவர்களாக சர்வதேச சமூகத்தினர் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். பிரித்தானியப் பிரதமரின் சர்வதேச விசாரணை தொடர்பான கருத்தையும் அவரது யாழ். விஜயத்தையும் சிங்கள இனவாதக் கட்சிகளும் அமைப்புக்களும் கடுமையாக சாடியுள்ளன.
பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து, மாநாட்டினுடைய நிறைவேற்றுக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பே பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கிற்குப் பயணித்தமையானது “உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்யும் செயலாகும்” என்று தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில் சமாதானம் நிலைகொண்டுள்ள இத் தருணத்தில் எமது நாட்டை இனரீதியாகப் பிளவுபடுத்தி அவர்களின் தேவைக்கு ஏற்றால் போல் இனவாதத்தை போஷிக்கும் வகையிலேயே டேவிட் கமரூனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்றும் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பிரித்தானியப் பிரதமர் இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக இலங்கை அரசாங்கமும் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தியில் இடம் பெயர்ந்தோர் முகாமுக்கு டேவிட் கமரூன் சென்றிருந்தபோது பிரதான உள்ளூர் தமிழ் அதிகாரியை டேவிட் கமரூன் ஓரங்கட்டிவிட்டார். தேசிய வருகைப்பதிவேட்டில் ஒப்பமிட அவர் மறுத்ததுடன் வரவேற்பு நடனத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியப் பிரதமரின் கருத்துத் தொடர்பில் ஜே.வி.பி.யும் தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென்று கூறுவதற்கு பிரித்தானியாவுக்கோ, டேவிட் கமரூனுக்கோ எந்தவித உரிமையும் இல்லை. டேவிட் கமரூன் இவ்வாறு கூறுவதற்கு இலங்கை ஒன்றும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடு அல்ல. ஆனாலும், பிரித்தானியப் பிரதமர் இவ்வாறான கூற்றை வெளியிடுவதற்கு அரசாங்கமே வழிசமைத்தது என ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமித்து உள்ளக விசாரணையை மேற்கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இதனை நாம் அன்று கூறியபோது அரசாங்கம் கணக்கிலெடுக்கவில்லை எனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டுமென்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமென்றும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கான செயற்றிட்டங்கள் ஒதுக்கப்படாமையினால் 2013 ஆம் ஆண்டும் இதே தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும், இராணுவத்தினருடன் சம்பந்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதற்கிணங்க , இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தது. இந்த விசாரணையை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் இராணுவத்தினர் தொடர்புபடவில்லையென்றும், நாட்டில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய விசாரணையும் அறிக்கையுமே சர்வதேச சமூகத்தின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தான் இராணுவத்தினரின் விசாரணைகளில் சுயாதீனத் தன்மை இல்லை என்றும், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துக்களும் இதனையே பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை தடுக்கவேண்டுமானால் அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உரிய வகையில் செயற்பட வேண்டும். இதனை விடுத்து கமரூன் மீதோ, அல்லது சர்வதேசத் தலைவர்கள் மீதோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை.
No comments
Post a Comment