மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி செய்கை பண்ணப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்கும் நோக்கிலும் கால் நடைகளை பட்டினி போட்டு பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையிலுமே திருகோணமலையில் நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்துத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக திருகோணமலையில் ஓர் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் தீர்மானம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,
பெரும்போக அறுவடை வரை கால்நடைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டு செல்லுதல் வேண்டும். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நாம் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தோம். கால்நடைகள் பற்றிய பட்டியலை சமர்ப்பித்தால் கால்நடைகளை மேய்ச்சல் தரைகளில் அனுமதிப்பதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை நாம் ஆட்சேபித்தோம். இறுதியில் உடன்பாடு காணப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்றபோது அதற்கு அனுமதி இராணுவத்தினரால் மறுக்கப்பட்டது.
இதனை அடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் ஒரு விசேட கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இராணுவம் ஏற்க மறுத்ததன் மூலம் சிவில் நிருவாகம் நடைபெறவில்லை என்றும் இராணுவ ஆட்சியே நடைபெறுவது நிரூபணமாகிறது என்றும் இக்கூட்டத்தில் நான் பிரஸ்தாபித்தேன்.
இதனை ஏற்கமறுத்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்னுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். அதனை அடுத்து எதுவித முடிவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் முடிவடைந்தது. முடிவு காணும் நிலையிலும் முதலமைச்சர் நடந்து கொள்ளவில்லை.
நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வருடத்தில் இதற்கு முன்னர் இரு தடவையும் அதன் பின்னர் ஒரு தடவையுமே மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த வருடத்தில் அபிவிருத்திக் குழுக்கூட்டம் கிரமமாக நடத்தப்படவில்லை. அடுத்த வருடத்தில் இவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது.
இதன்படி திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் காணிப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் ஏற்ெகனவே முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே விசேட கூட்டங்கள் இரண்டு கூட்டப்பட்டன. அதன் பின்னர் மீண்டும் அபிவிருத்திக் குழுவுக்கு கொண்டு செல்வது காலத்தை கடத்தும் செயலாகும். இது ஒரு சதி முயற்சி என நாம் கருதுகிறோம். இதற்கு கிழக்கு மாகாண சபையும் துணை போகிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
சுமார் 25 ஆயிரம் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இல்லை. அறுவடைக்கு இன்னமும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை இவற்றைக் கட்டி தீனி வழங்க முடியாது. இதனால் பண்ணையாளர்கள் பெரும் அவதியுறுவதுடன் கால் நடைகளும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளன. இது வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாகும்.
திருகோணமலை தீர்மானத்துக்கு அமைய மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களை உடனடியாக கூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், தற்போது பாராளுமன்றம் நடைபெறுகின்றது.
வரவு செலவுத்திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர் அபிவிருத்தி குழுக்கூட்டத்தைக் கூட்டி மேய்ச்சல் தரை பிரச்சினையை ஆராயும்போது மேய்ச்சல் தரையில் அத்து மீறி விவசாயம் செய்துள்ள வெளி மாவட்டத்தினர் அறுவடையை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவர்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் பண்ணையாளர்களே. எனவே, அபிவிருத்தி குழுவின் தீர்மானம் மீறப்படுமானால் அங்கு சிவில் நிருவாகம் இல்லை என்பது புலனாகிறது. இதை எடுத்துக் கூறுவதில் என்ன தவறு உள்ளது? இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்
No comments
Post a Comment