இலங்கையில் அடுத்த வாரம் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் போர்க்குற்றங்கள் குறித்த ‘நோ பயர் சோன்’ என்ற ஆவணப்படம் டெல்லியில் இன்று திரையிடப்பட்டது.
சமூக ஜனநாயகத்திற்கான மையம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த படம் திரையிடப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கல்லம் மெக்ரே இயக்கிய ‘நோ பயர் சோன்’ என்ற இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இருந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே உச்சக்கட்டப் போர் நடைபெற்றபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள், ‘நோ பயர் சோன்’ என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்தப் பகுதியிலும், இலங்கை ராணுவம் குண்டுகளை வீசி, அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது.
இலங்கை ராணுவ வீரர்களின் மனிதாபிமானமற்ற செயலை மேலும் தோலுரித்துக் காட்டும் வகையில், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவை சேர்ந்த இசைப்பிரியாவின் மரணக்காட்சி அமைந்திருந்தது. முன்னதாக, விடுதலைப்புலிகள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, போரில் இறந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
ஆனால், இலங்கை ராணுவ வீரர்கள் அவரை உயிருடன் பிடித்து தூக்கி வரும் காட்சி, ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அரை நிர்வாணமாக இருக்கும் அவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்தக் காட்சி உள்ளது
![]() |
click for video |
No comments
Post a Comment