எவராவது உங்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது வீட்டில் வந்து நேரடியாகவோ கொலை அச்சுறுத்தல் விடுத்தால் மன்னார் பிரஜைகள் குழுவினூடாக பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். அதற்கு எங்களது ஒத்துழைப்பு இருக்கும் என்று வடமாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான எஸ்.பிறிமுஸ் சிராய்வா இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் தற்பொழுது தொலைபேசி மூலமும், நடு இரவில் வீடுகளுக்குச் சென்றும் தாங்கள் புலனாய்வு பிரிவினர் எனக் கூறி பொதுநலப் பணிகளில் ஈடுபடுவோர் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் பொலிஸ் அதிகாரிகளிடமும், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகளிடமும் மேற்கூறப்பட்ட விடயமாக மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வைத் தொடர்ந்து வட மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான எஸ். பிறிமுஸ் சிராய்வா மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்களின் மாநாட்டில் பாதிப்பு அடைந்தோர் முன்னிலையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது குங்குமப் பொட்டுக்கள் நிலைக்குமா, நிலைக்காதா என்ற ஏக்கத்தில் காணாமற்போன தங்கள் கணவரைத் தேடித் திரியும் மனைவியரையும், தங்கள் பிள்ளைகள், உறவுகள் திரும்பி வருவார்களா? என்ற நிலையில் தங்கள் உறவுகளைத் தேடுவோர் மீதும், இதற்கு உறுதுணை புரியும் பொதுநலவாதிகளுக்கும் தற்பொழுது மன்னாரில் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது.
பயத்தின் காரணமாக பலர் இச் சம்பவங்களை வெளிக்கொணராமல் இருக்கின்றனர்.
இது தற்பொழுது உச்சக் கட்டத்துக்கு செல்வதையிட்டு நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ஊடகத்துறையினருக்கும் தெரியப்படுத்தி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்துள்ளோம்.
காணாமற் போனவர்களை நீங்கள் தேடினால் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள் என அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த அரசு மிகவும் அநாகரிகமான முறையில் படையினரை உருவாக்கி வைத்துள்ளது.
பொதுமக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மன்னார் அமைப்பாளர் சுணேஸுக்கு அண்மைக்காலமாக தொலைபேசி அச்சுறுத்தலும் கடந்த புதன்கிழமை இரவு வீட்டுக்குச் சென்று கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இவை தொடரக்கூடாது என்பதற்காக மன்னார் பிர
ஜைகள் குழு மன்னார் ஆயர், தென்பகுதி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெற வழிசமைக்கப்படமாட்டாது என பொலிஸார் எமக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இருந்தபோதும் எவராவது சீருடையின்றியும், இரவில் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு ஒத்துழைக்காது எமக்குத் தெரியப்படுத்துங்கள். அத்துடன் தொலைபேசியில் அச்சுறுத்தல் வரும்போது அதன் இலக்கத்தை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
No comments
Post a Comment