Latest News

October 30, 2013

வலிகாமம் வீடழிப்பு நடவடிக்கைகள் ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் – மாவை
by admin - 0

நிலத்துக்குச் சொந்தக்காரரான தமிழ் மக்கள் அகதிவாழ்வு வாழ அங்கு இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் குடியமர்வது எந்தவகையில் நியாயமானது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இவ்வாறான வீடழிப்பு நிகழ்வுகள் ஆயுதப் போராட்டத்திற்கே தமிழ் மக்களை மீண்டும் தள்ளுகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா செல்ல முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவது இராணுவத்தினரையும், இராணுவத்தின் குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காகவே என்று குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்ததன் ஊடாக அவர்களின் உண்மையான நடவடிக்கை அம்பலமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நடந்துமுடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவான ஆணையை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கியுள்ளனர் என்றும் அதாவது, இராணுவத்தின் தலையீடுகள் எதுவுமின்றி வடக்கில் தமிழரைத் தமிழரே ஆளவேண்டும் என்பதே வடக்கு மக்களின் ஆணை என்றும் தெரிவித்தார்.
இதனையும் மீறி மீண்டும் பழையபடி வலிகாமம் வடக்கில் தமது அராஜக நடவடிக்கைகளைக் காட்டத் தொடங்கியுள்ளனர் இராணுவத்தினர். இராணுவத்தினரின் இவ்வாறான செயல்கள் தமிழ் மக்களை மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்துக்கே இட்டுச்செல்லும் என்று தெரிவித்தார்.
எனினும், அந்த வழிக்கு நாம் திரும்பாமல் அஹிம்சை வழியில் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் எமது பிரச்சினைக்குத் தீர்வைக் காண விரும்புகிறோம். சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவுகட்டுவோம் எனவும் குறிப்பிட்டார்.
‘வெளிநாடுகளுக்குச் செல்லும் நாம் அங்குள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் இது குறித்துக் கலந்துரையாடுவோம். அதேவேளைஇ பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வரும் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைப்போம்’ எனவும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments